▼

சனி, 17 அக்டோபர், 2026

ஞான முத்துக்கள் – 1 – தர்மத்தின் மகத்துவம்!


சித்த மார்கத்தில் கிடைத்த சித்தர்களின் அறிவுரைகள், மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரிய சிந்தனைகளாகும். தர்மத்தின் மகத்துவத்தையும், அதன் ஆன்மிகப் பயன்களையும் எடுத்துரைக்கும் சில அறிவுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


ஞான முத்துக்கள்

  1. விதி விலகி வழிவிட திடமாக தர்ம பாதையில் நடந்து கொண்டே இரு.
  2. தர்மத்தின் வழி செல்லச் செல்ல, கர்மத்தின் வலி குறையும்.
  3. தர்மத்தைப் பிடி, அது உன்னை கரையேற்றும்!
  4. தர்ம சிந்தனை வந்திட பூர்வ புண்ணியம் வேண்டும்.
  5. தர்ம சிந்தனை பிறப்பிலே வர, அவன் முன்னோர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
  6. சத்தியத்தையும் தர்மத்தையும் எவன் ஒருவன் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறானோ, அவனைத் தேடி இறை வரும்.
  7. சுவாசிப்பதுபோல், அன்னம் உண்பதுபோல், செயல்படுவது போல், தர்மம் இயல்பாக இருக்க வேண்டும்.
  8. மனிதன் நல்லதை எண்ணி, நல்லதை உரைத்து, நல்லதைச் செய்யும்பொழுது உண்மையான தெய்வீக ஞானம் பிறக்கும்.
  9. செய்கின்ற தர்மங்கள் எல்லாம் மேலும் இறைவனருளைக் கூட்டி வைக்கும், முன்ஜென்ம பாவத்தைக் கழித்து வைக்கும், புண்ணியத்தைப் பெருக்கி வைக்கும், தேவையற்றதை எல்லாம் அது வகுத்து வைக்கும்.
  10. மனம் உவந்து, மனமார, மனம் ஆறுதல் பெற செய்யும் காரியத்தில் தான் புண்ணியம் வரும்.
  11. ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும், எத்தனை மந்திரங்கள் உரு ஏற்றினாலும், எத்தனை அபிஷேகங்கள், யாகங்கள் செய்தாலும் கூட, அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளைப் பெற முடியாது.
  12. இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், உதவும் குணமும், தர்மமும் ஒரு மனிதனிடம் இருந்தால், அவன் இறையைத் தேட வேண்டியதில்லை, இறையே அவனைத் தேடி வரும்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!