செவ்வாய், 1 செப்டம்பர், 2026

துளிகள் - 57 - வாக்கின் அளவு அல்ல, உணர்ந்து கொள்வதே சிறப்பு!


இறைவன் அருளைக்கொண்டு வாக்குகளைக் கூறுகிறோம். ஒரு வேளை நாங்கள் வாக்கே கூறவில்லை என்பதாகக் கொண்டாலும், அதனால் அந்த ஆத்மா அல்லது அந்த மனிதன் முழுக்க, முழுக்க தகுதியற்றவன் என்றோ அல்லது தீயவன் என்றோ பொருளல்ல.

அல்லது நாங்கள் தொடர்ந்து நாழிகை, நாழிகையாக வாக்கைக் கூறுகிறோம் என்பதற்காக அவன் ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்றோ, குணத்தில் உயர்ந்தவன் என்றோ பொருள் அல்ல.

எனவே இவையெல்லாம் அந்தந்த நாழிகையின் கிரக நிலையைப் பொறுத்தும், அந்தந்த மனிதனின் வினைப்பயனைப் பொறுத்தும் அமைவதாகும்.

தொடர்ந்து ஒரு மாணாக்கனை வைத்துக்கொண்டு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டேயிருந்தால், இதை சிறப்பு என்பதா? தனி கவனம் செலுத்துகிறார் என்பதா? அல்லது ஒரு முறை உரைத்தாலே புரிந்து கொள்ளும் மாணவனை அந்த ஆசிரியர் சரியாக கவனிக்கவில்லை என்று கூறுவதா?

பலமுறை திரும்பத் திரும்ப போதிக்க வேண்டிய நிலையில் இருந்தால், கேட்கின்ற மாணாக்கனின் கிரகிக்கும் திறன் குறைவு என்பது பொருள்.

ஒரு முறை குறிப்பாகக் கூறினாலே ஒரு மாணாக்கன் புரிந்து கொண்டுவிட்டால், கிரகிக்கும் திறன், சிந்தனையாற்றல் சரியாக இருக்கிறது என்பது பொருள்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக