செவ்வாய், 1 செப்டம்பர், 2026

துளிகள் - 57 - வாக்கின் அளவு அல்ல, உணர்ந்து கொள்வதே சிறப்பு!


இறைவன் அருளைக்கொண்டு வாக்குகளைக் கூறுகிறோம். ஒரு வேளை நாங்கள் வாக்கே கூறவில்லை என்பதாகக் கொண்டாலும், அதனால் அந்த ஆத்மா அல்லது அந்த மனிதன் முழுக்க, முழுக்க தகுதியற்றவன் என்றோ அல்லது தீயவன் என்றோ பொருளல்ல.

அல்லது நாங்கள் தொடர்ந்து நாழிகை, நாழிகையாக வாக்கைக் கூறுகிறோம் என்பதற்காக அவன் ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்றோ, குணத்தில் உயர்ந்தவன் என்றோ பொருள் அல்ல.

எனவே இவையெல்லாம் அந்தந்த நாழிகையின் கிரக நிலையைப் பொறுத்தும், அந்தந்த மனிதனின் வினைப்பயனைப் பொறுத்தும் அமைவதாகும்.

தொடர்ந்து ஒரு மாணாக்கனை வைத்துக்கொண்டு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டேயிருந்தால், இதை சிறப்பு என்பதா? தனி கவனம் செலுத்துகிறார் என்பதா? அல்லது ஒரு முறை உரைத்தாலே புரிந்து கொள்ளும் மாணவனை அந்த ஆசிரியர் சரியாக கவனிக்கவில்லை என்று கூறுவதா?

பலமுறை திரும்பத் திரும்ப போதிக்க வேண்டிய நிலையில் இருந்தால், கேட்கின்ற மாணாக்கனின் கிரகிக்கும் திறன் குறைவு என்பது பொருள்.

ஒரு முறை குறிப்பாகக் கூறினாலே ஒரு மாணாக்கன் புரிந்து கொண்டுவிட்டால், கிரகிக்கும் திறன், சிந்தனையாற்றல் சரியாக இருக்கிறது என்பது பொருள்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

துளிகள் - 56 - மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்குக் காரணமா?


இறைவன் படைக்கும்பொழுதே எல்லாவற்றையும் சிறப்பாக, உயர்வாக, எல்லா மனிதர்களும் பேதமில்லாமல் இருக்க வேண்டும் என்று இக்கணம் எண்ணினாலும் எல்லாம் சுபமாக, சுவையாக, எதிர்பார்க்கின்ற விதமாக இருந்துவிடும்.

ஆனால் இறைவன் என்ன செய்தார்?

மனிதர்களுக்கென்று சில சுதந்திரங்களையும், சிந்திக்கக்கூடிய அறிவையும் தந்து, அவனுடைய சுய அறிவால் நன்மை, தீமைகளைப் பிரித்துப் பார்த்து வாழ்ந்துவிட்டு வரட்டும் என்று தந்தால், மனிதன் நன்மையை நாடுவதைவிட, நன்மைக்கு மாறான விஷயங்களை நாடுவதிலே கவனம் செலுத்தி, தன்னையும் கெடுத்துக்கொண்டு, தன் சந்ததியையும் கெடுத்துக்கொண்டு, இந்த உலகத்தையும் கெடுத்துக்கொண்டான்.

ஒரு வகையில் பார்த்தால், மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்குக் காரணமாகிவிட்டது என்று கூட வேடிக்கையாகக் கூறலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 55 - தன்னை உணர்தலே இறைவனை நோக்கிய முதல் அடி!


எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் பிறரிடம் உள்ள நன்மை தரும் செயல்களையெல்லாம் பொதுவில் பாராட்டுகிறானோ, எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள குறைகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறானோ, அப்பொழுதே அவன் தன்னை உணரத் துவங்கிவிடுகிறான்.

இதிலிருந்தே அவன் இறைவனை நோக்கிச் செல்வதற்குண்டான முதல் அடியை எடுத்து வைக்கிறான் என்பது பொருளாகும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

புதன், 19 ஆகஸ்ட், 2026

துளிகள் - 54 - மனிதப்பிறவியின் நோக்கம் — புலன் வாழ்வைத் தாண்டி இறைநோக்கிப் பயணிப்பதே!


வினைகளின் கூட்டுத் தொகுப்பான பிறவிகளில், மனிதப்பிறவி விலங்கான பிறவிகளிலிருந்து சற்றே கடுகளவு மேம்பட்டது என்றாலும், மேலும் மேம்பட சற்றே முயலாமல், அந்த விலங்குத் தன்மையை மட்டும் கொண்டு, உணர்வுகளுக்கு ஆட்பட்டு, உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்கின்ற தன்மையே பெரும்பாலான மனிதர்களிடம் நிலவி வருகிறது.

இறைவனின் கருணையைப் பெறவும், மேலும் மேலும் இறை நோக்கிப் பயணம் செய்யவும், பாவங்களைச் சேர்க்காத வாழ்க்கை வாழவும், சேர்த்த பாவங்களைக் கழிக்கவும் மட்டுமே மனிதப்பிறவி என்பதை ஒரு மனிதன் புரிந்துகொள்ளவே பல பல பிறவிகள் ஆகிவிடுகின்றன.
அவன் புலன்களால் கண்டு, கேட்டு, உணரக்கூடிய வாழ்க்கை முறையை நுகர்வதே வாழ்க்கை என்று எண்ணுகின்ற தன்மையில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆதலால், புலன் வாழ்வைத் தாண்டி மேலான வாழ்வு நிலையை நோக்கிச் செல்வதற்குக் கொடுக்கப்பட்ட பிறவியை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள, கூடுமானவரை முயற்சி செய்வதே ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

துளிகள் - 53 - காசியில் இறந்தால் முக்தியா? — ‘காசி’ என்பதன் உண்மைப் பொருள்!


காசி என்ற சொல்லுக்கு புருவ மத்தி என்ற ஒரு பொருள் இருக்கிறது.

காசியில் இறந்தால் முக்தி’ என்பது தவறான வாதம். காசி எனும் புருவ மத்தியில் மனதை நிலைநிறுத்தி இருந்தால் முக்தி என்று கொள்ள வேண்டும்.

காசியில் இருந்தால் முக்தி.

எனவே, காசியில் இறந்தால் முக்தி என்பது ஒரு தவறான வழக்காகும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 52 - மனம் சுத்தமானால் தேசமும் சுத்தமாகும்!


நன்றாக கவனிக்க வேண்டும், எந்த தேசத்திலும் அதிகாலை எழுந்து வீட்டு வாசலைப் பெருக்கி கோலமிடும் பழக்கம் இல்லையப்பா. இங்கு பாரதத்தில்தான் இருக்கிறது.

சுத்தத்தை ஆதியில் மனித குலத்திற்குப் போதித்த இடமே இந்த பாரத மண்தானப்பா. அப்பேற்பட்ட மண் இப்பொழுது அசுத்தமாக இருக்கிறது. காரணம், இங்குள்ள மனித மனம் அசுத்தமாகிவிட்டது.
முதலில் மனித மனம் சுத்தமானால், இந்த தேசம் சுத்தமாகும். தேசம் சுத்தமானால் தீங்கு தரும் சிறு உயிர்கள் (கொசு, விஷ ஜந்துக்கள்), சிறிய உயிரினம் இங்கு இல்லாத நிலையை இறைவன் உருவாக்குவார்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

புதன், 12 ஆகஸ்ட், 2026

துளிகள் - 51 - சொந்த வீடு அமையத் தடையாகும் மனைதோஷம் விலகும் வழி!


சொந்த வீடு அமையா தோஷம் விலக, முதலில் ஆத்மா குடியிருக்கும் தேக வீட்டை நன்றாக ஒரு மனிதன் பராமரிக்க வேண்டும்.

ஒரு பிறவியிலே பெற்ற புண்ணியத்தால் பல்வேறு இல்லங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு பல்வேறு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அப்பொழுது அந்த ஆணவத்தால் பலரை இடர்ப்படுத்திய பாவம்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்லதொரு சுகமான இல்லம் அமையாமல் ஒரு மனிதன் வேதனைப்பட நேரிடுகிறது.

எனவே, இதுபோன்ற கடுமையான மனைதோஷம் அடையப்பெற்ற ஜாதகர்கள், அவர்கள் விருப்பம்போல் இறை வழிபாட்டை செய்வதோடு, குறிப்பாக செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வணங்கி, நவகிரகங்களில் உள்ள செவ்வாய்க்கும் முடிந்த பிரார்த்தனைகளை செய்துகொண்டே இருப்பதும், கூடுமானவரை மனைதோஷங்கள் குறைவதற்கு முடிந்தவரை தர்மங்களை, குறிப்பாக சிறிய அளவு மனையையாவது ஒரு ஏழைக்கு தானமாக அளித்தால், கட்டாயம் இந்த தோஷம் விலகுமப்பா.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

துளிகள் - 50 - இறை நீதியை உணர, பாவங்களைக் கழிப்பதே முதல் படி!


இறை நீதி என்ற கொள்கை குறித்தும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் ஒரு மனிதன் இதுவரை சேர்த்த பாவங்களையெல்லாம் அனுபவித்துத் தீர்க்க வேண்டும் அல்லது கூடுமானவரை தான, தர்மங்களாலும், வழிபாட்டாலும், வேறு ஸ்தல யாத்திரைகளாலும் தீர்க்க வேண்டும்.

பாவங்கள் கடுகளவு இருந்தாலும் கூட பரிபூரணமாக இறைவனைப் புரிந்துகொள்ள முடியாது.

எனவே, இறைவனைப் புரிந்துகொள்ளவோ அல்லது இறை நீதியைப் புரிந்துகொள்ளவோ அல்லது முக்தி போன்ற நிலையை அடைவது குறித்தோ ஆய்வு செய்வதற்கு முன்னால், முதலில் உலகியல் ரீதியான கடமைகளை நேர்மையாக ஆற்றிக்கொண்டே, சேர்த்த பாவங்களையெல்லாம் நல்லவிதமாகக் கழித்து, தர்மத்தால் குறைத்துக்கொண்டே வந்தால், தாராளமாகப் பாவங்கள் குறையக் குறைய, அனைத்தும் உள்ளத்தில் தெள்ளத் தெளிவாகப் புலப்படத் துவங்கும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 49 - ஒரே ஆன்மா பல கூறுகளாகப் பிரிந்து பல பிறவிகள் எடுக்குமா?


பிறப்பு போன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும், புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்குப் பக்குவம் இருக்க வேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தர வேண்டும். இல்லையென்றால், நாங்கள் கூறுகின்ற விளக்கம், நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறுவிதமாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலை வரும்.

இப்பொழுது ஒரு மனித உடலில் இருக்கின்ற ஆத்மாதான் ஏதாவது பாவத்தால் ஒரு விலங்கு தேகம் எடுக்கிறது அல்லது ஒரு சிறிய பூச்சியாகக்கூடப் பிறக்கிறது.

இன்னொன்று தெரியுமா? ஒரே மனித ஆத்மா பல்வேறு பாவங்களின் காரணமாகப் பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டுக்கூட ஒரே சமயத்தில் பல்வேறுவிதமான விலங்கு, பட்சி, இன்னும் புழு, பூச்சி தேகத்தைக்கூடப் பெற வாய்ப்பிருக்கிறது.

ஆன்மாவைப் பிரிப்பதும், சேர்ப்பதும் இறைவனுக்கு மிகவும் கை வந்த கலையப்பா. ஆனால் அப்படியெல்லாம் பிளவுபட்டால், அது மிகப்பெரிய பாவதோஷமுள்ள ஆத்மா எனலாம்.

அதே சமயம், மிகப்பெரிய புண்ணிய ஆத்மாக்களும் இறைவனின் அபரிமிதமான கருணையால் தன் ஆன்மாவை ஒரே சமயத்தில் பல்நூறு கூறுகளாகப் பிரித்து, பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பிறவியெடுக்கின்ற நிலைமை ஏற்படும்.

இறைவன் அல்லது இறைவனுக்குச் சமமான முனிவர்கள் இதனைச் செய்வார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள், செய்தும் இருக்கிறார்கள்.

பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் – இவர்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியவரும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 48 - தவிர்க்க முடியாத பாவங்களைப் புண்ணியத்தால் நீர்த்துப்போகச் செய்வோம்!


தாவர இனங்களை உண்பதால் பாவம் வராது என்று நாங்கள் கூறவில்லை. குறைந்தபட்சம் பாவம் வரத்தான் செய்யும். அதனால்தான் பிறவியே வேண்டாம் என்று இறைவனிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

மனிதனாகப் பிறவியெடுத்துவிட்டாலே எத்தனைதான் நேர்மையாக வாழ்ந்தாலும், தவிர்க்க முடியாமல் சில பாவங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.

எனவேதான் அதனையும் தாண்டி பலகோடி மடங்கு புண்ணியத்தைச் செய்தால் இந்தப் பாவம் நீர்த்துப் போகும். ஆனால் முன்னர் சொன்ன உயிர்க்கொலை பாவங்கள் நீர்த்துப் போகாது, அவ்வளவே.

மன்னிக்கக்கூடிய பாவம், மன்னிக்கவே முடியாத பாவம் என்று எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன. சில தவிர்க்க முடியாத பாவங்கள் இறையால் மன்னிக்கப்படலாம். சில பாவங்கள் இறையால் மன்னிக்கப்பட மாட்டாது.

எனவே, தெரிந்தும் எதற்கு ஒரு மனிதன் மன்னிக்கப்படாத பாவங்களைச் செய்ய வேண்டும்?

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 47 - படைத்தவனைப் பழிப்பதைவிட, பாவமற்ற மனதை வேண்டுவோம்!


மாயை சென்று எல்லோரையும் பற்றும் வண்ணம் அந்த உயிர்களின் கர்மவினை இருக்கிறது.

உயிர்களை இறைவன் ஏன் படைத்தான்? படைத்ததால்தானே உயிர்கள் எல்லாம் பாவங்கள் செய்தது? என்ற அடுத்ததொரு வினாவை ஏற்கனவே இவன் கேட்டிருக்கிறான்.

அதாவது ஏகன், ஏகனாகவே இருந்துவிட்டால் பிறகு பிரச்சினையே இல்லையே? ஏகன் எதற்கு அநேகனாக மாறினான்? என்று இவன் கேட்கிறான்.

ஏகன், அநேகனாக மாறுவதற்கு முன்னால் அந்த ஏகனைப் பார்த்து யாராவது ஒருவர், ‘நீ இப்படியே இரு. பல்கூறுகளாகப் பிரியாதே’ என்று கூறியிருக்கலாம். ஆனால் அங்குதான் அப்படிக் கூறுவதற்கு யாருமில்லையே? அப்படி யாராவது கூறவேண்டும் என்பதற்காகவாவது ஏகன், அநேகன் ஆகியிருக்கலாம் அல்லவா?

எனவே, ‘என்னை எதற்காகப் படைத்தாய்? படைத்ததால்தான் பாவங்கள் செய்தேன்’ என்று கூறுவதைவிட, ‘நான் பாவங்கள் செய்யாமல் இருக்கும் வண்ணம் என் மனநிலையை அமைத்துக்கொடு’ என்று பிரார்த்தனை செய்வது சிறப்பு.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

துளிகள் - 46 - இரத்த பந்தம் இல்லாதவர்களுக்கு உதவினால் பாவங்கள் விரைவில் குறையும்!


தாய், தந்தையைப் பேணவேண்டும் என்ற நோக்கிலே, தாய், தந்தையை மதிக்கவேண்டும், போற்றவேண்டும் என்பதற்காக அவ்வாறெல்லாம் எல்லா புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது.

அதே சமயம், உடன் பிறந்தவர்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டிருக்கிறது. அதற்காக மற்றவர்களுக்கு உதவக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை.

என்னதான் இரத்த பந்தம் உடையவர்களுக்கு உதவ வேண்டியது கடமை என்றாலும், இரத்த பந்தம் இல்லாதவர்களுக்கு உதவும் பொழுதுதான் விரைவில் பாவங்கள் குறைகின்றன.

எனவே, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டியது மனிதனுக்கு அத்தியாவசியமான கடமை. அந்தக் கடமையிலிருந்து அவன் தவறினால், கடமை தவறிய குற்றம், பாவம் வந்து சேரும்.

இரத்த தொடர்பில்லாதவர்களுக்கு உதவி செய்யாவிட்டால் புதிதாக பாவம் வராது. ஆனால் சேர்த்த பாவம் தீராது, புண்ணியமும் சேராது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 45 - இறைவன் அருளால் கருடபுராணத்தை அனுதினமும் ஓதலாம் — தவறேதுமில்லை!


இறைவன் அருளால் கருடபுராணத்தை அனுதினமும் ஓதலாம், தவறேதுமில்லை. இது அனுதினமும் ஓதப்பட்ட விஷயம் அல்ல என்பது மனிதனின் அறியாமையால் ஏற்பட்ட ஒன்று.

மனிதன் உடலை விட்ட பிறகு அவனுக்கு கருடபுராணம் ஓதி என்ன பயன்? உடலோடு இருக்கும்பொழுது கருடபுராணம் ஓதினால்தான், இப்படியெல்லாம் வாழ்ந்தால் இப்படி தண்டனைகள் கிடைக்கும். இப்படியெல்லாம் வாழக்கூடாது என்ற கருத்தை புரிந்து கொள்வான்.

ஆனால் மனிதனுக்கு கிட்டிய கருடபுராணம் குறைந்த அளவே. அதுவும் இடைச்செருகல்களோடு கிடைக்கப்பட்டிருக்கிறது.

அதே போல் நரகம், சொர்க்கம் என்பது உண்மை. அது ஒருபுறம் இருக்கட்டும். இப்பூலோகமே நல்ல எண்ணம் கொண்டவனுக்கு, புண்ணிய ஆத்மாவிற்கு சொர்க்கமாகவும், அப்படியில்லாதவனுக்கு நரகமாகவும் தோன்றுவது உண்மையே.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 8 ஆகஸ்ட், 2026

துளிகள் - 44 - குருவைத் தேடாதே — தகுதியான சிஷ்யனாக இரு!


தக்க குரு குறித்து பல்வேறு மனிதர்கள் எம்மிடம் வினவுகிறார்கள். சிலர் வந்து, “என் குரு யார்? எங்கிருக்கிறார்? எந்தக் குருவை நான் பின்பற்ற வேண்டும்?” என்றெல்லாம் கூட கேட்பதுண்டு.

நாங்கள் கூறுவது என்னவென்றால், ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்களைப் போதிக்கின்ற எல்லோரும் குருமார்களே. ஒவ்வொரு அனுபவமும் கூட ஒரு மனிதன் நல்ல விஷயத்தைக் கற்றுக்கொள்ள உதவினால், அதுவும் குருதான்.

எனவே, நாங்கள் பொதுவாகக் கூறுவது என்னவென்றால், குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக் கூடாது. சிஷ்யனைத் தேடித்தான் குரு வரவேண்டும். அந்த அளவிற்கு அந்தச் சிஷ்யன் நடந்துகொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் ஆழ்வார்கள் கதையை நினைவூட்டிக் கொண்டால் நன்றாகவே புரியும். அந்தப் புளிய மரத்தின் அடியிலே கிடந்த ஆழ்வானைத் தேடித்தான் குரு சென்றார் என்பதை நினைவூட்டிக் கொண்டால், மற்றவை தானாக விளங்கும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 43 - மனதைச் செம்மைப்படுத்துவதே பூஜையின் நோக்கம்!


எல்லாவகையான பூஜைகளுக்கும் அடிப்படை ஒழுக்கம் அவசியம். பூஜைகளே செய்யாவிட்டாலும் போதும். ஒரு மனிதன் ஒழுக்கமாக, நேர்மையாக வாழ்ந்தாலே அதுவே ஒரு பூஜைதானப்பா.

‘பூஜை செய்கிறேன்’ என்று ஒருவன் பிறரை இடர்படுத்துவதோ, தன்னை இடர்படுத்திக் கொள்வதோ அல்ல.

எனவே, மனோரீதியாக ஒருவன் மனிதநேயத்தை வளர்த்துக்கொண்டு, மனதைச் செம்மைப்படுத்த, மனதை வைராக்யப்படுத்த, மனதை வைரம்போல் உறுதிப்படுத்தத்தான் பூஜைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் அந்தப் பூஜையைச் செய்து, அதனால் மனச்சோர்வுதான் மிச்சம் என்றால், அவன் அந்தப் பூஜையையே செய்யத் தேவையில்லை.

எனவே, சரியான வழிமுறை என்பதைவிட ஒரு மனிதனின் மனநிலைதான் அங்கே முக்கியம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

துளிகள் - 42 - பழனி முருகனையும் போகரையும் பூஜித்து வணங்கினால், அவரவர்க்கான வழியை உள்ளுணர்வின் மூலம் போகர் காட்டுவார்!


அவரவர்கள் பிரச்சினைகளுக்கு அவரவர்களே அறிந்து கொள்ள பழனியம்பதிக்கு சென்று முருகப்பெருமானையும், போகனையும் வணங்கிவிட்டு அவரவர் இல்லத்திலே போகரின் உருவத்தை வைத்து, முருகப்பெருமானின் உருவத்தை வைத்து அன்றாடம் பூஜித்து வணங்குவதும், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து அதிகாலையிலே போகனை நினைத்து, நினைத்து, நினைத்து துதி செய்தால் அவன் உள்ளிருந்து பலவற்றைக் காட்டித் தருவான். இன்னின்ன பிணிக்கு இன்னின்ன செய்தால் நன்மை உண்டு. உன் பிணிக்கு இதை செய்தால் போதும் என்று உள் உணர்வாகவே உணர்த்தி வழிகாட்டுவான்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

புதன், 5 ஆகஸ்ட், 2026

துளிகள் - 41 - அதிதி சேவையின் மகிமை — பித்ரு தோஷ நிவர்த்திக்கான எளிய வழி!


அதிதியாக வரக்கூடிய மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், தேகமெங்கும் அழுகியிருந்தாலும், அருவருக்கத்தக்க தோற்றம் இருந்தாலும், அவனை அழைத்து அவன் பாதத்தை நன்றாக நீரால் நனைத்து, பாதபூஜை செய்து, அவனை இல்லத்தில் அமரவைத்து, ஒரு உயர்ந்த மகானோ, ஞானியோ வந்தால் என்ன மரியாதையை மனிதன் செய்வானோ, அப்படிச் செய்து இன்முகத்தோடு உணவிடுவதே பரிபூரண அன்ன சேவையாகும்.

ஏதோ ஒரு அன்னத்தை வாங்கினோம். "இந்தா! பிடித்துக்கொள்" என்று கொடுப்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும், "இப்படியாவது செய்கிறார்களே சேய்கள்?" என்று நாங்கள் சற்றே மனம் மகிழ்ந்து இருக்கிறோம்.

இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வந்தாலும், இந்த பித்ரு தோஷங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவே, இது ஒரு மனித வாழ்க்கையில் எல்லாவகையான பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. செய்தொழில் விருத்தியில்லாமலும், குடும்பத்தில் குழப்பமும், அதிக மருத்துவச் செலவினங்களை ஏற்படுத்திக்கொண்டு, நோய் ஒன்று போய் ஒன்று என்று வந்துகொண்டே இருப்பது போல, எல்லாவற்றையும் தாண்டி மனக்கிலேசமும், சித்தப்பிரமையும் குடும்பத்தில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

எனவே, எளிய வழிபாடுகளையும், தர்மகாரியங்களையும் செய்து, ஒரு மனிதன் இந்த தோஷத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வர வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 40 - உச்சகட்ட பாவங்களின் வெளிப்பாடே தோஷங்கள்!


‘பித்ரு’ என்ற சொல்லுக்கு முன்னோர்கள் என்ற பொருள் உண்டு.

ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து, வாழ்க்கையை முடித்துக்கொண்ட முன்னோர்கள் சேர்த்து வைத்த பாவம், அவர்கள் பெற்ற சாபம், அந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய நீர்க்கடனை செய்யாது விட்டதால் அவர்களால் வரக்கூடிய தோஷம் என்று பல்வேறு விதமான தோஷங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் பீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த பித்ரு தோஷத்தின் அடுத்த உயர்வான நிலைதான் “பிரம்மஹத்தி தோஷம்”. இதன் கிளைதான் “நாகதோஷம்”.

எனவே, இவையெல்லாம் உச்சகட்ட பாவத்தின் குறியீடுகள்தான். நாகதோஷம் என்றால் ஏதோ நாகப்பாம்பைக் கொன்றால் வரும் தோஷம் என்பது ஒரு தவறான நிலையாகும்.

எல்லா வகையான உச்சகட்ட பாவங்களின் ஒரு அடையாளம்தான் இதுபோன்ற தோஷங்களின் நாமகரணங்கள். நாமகரணங்களை விட்டுவிட்டு, உச்சகட்ட பாவங்கள் வாழ்க்கையில் பின்னிக் கலந்திருக்கின்றன.

அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டாலே, முதலிலே காலபைரவர் வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.

அடுத்ததாக, பசுக்களை நல்ல முறையில் பராமரிக்கின்ற ஒரு நிலைக்கு தன் மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, பாழ்பட்ட ஆலயங்களுக்குச் சென்று முடிந்த தொண்டுகளைச் செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு தினத்திற்கு உச்சிப் பொழுதிற்குள் ஒரு ஏழைக்காவது அன்னமிட வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

துளிகள் - 39 - உறவுகள் பயணத் துணைகளே — நிரந்தர பந்தங்கள் அல்ல!


குடும்பம் ஆனாலும், உறவானாலும், நட்பானாலும் கர்மவினைகளின் காரணமாக பிறப்பெடுத்து குறிப்பிட்ட மனிதர்களோடு, குறிப்பிட்ட உறவு என்ற பந்தத்திற்குள் இந்த ஜென்மத்திற்கு என்று அது அடைபட்டு இருக்கிறது.

இப்படி ஜென்ம, ஜென்மமாய் எத்தனை தாய்? எத்தனை தந்தை? எத்தனை தாரம்? எத்தனை பிள்ளைகள்?

கடந்த ஜென்மத்து தாய். அவளை நினைத்து ஏங்குவதா? அழுவதா?

கடந்த ஜென்மத்து பிள்ளைகளை எண்ணி ஏங்குவதா? அழுவதா?

இனிவரும் ஜென்மத்து உறவுகளை எண்ணி அழுவதா? சிரிப்பதா?

என்றெல்லாம் மனிதன் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தொலைதூர பயணத்திற்காக வாகனத்தில் அமரும் மனிதன் அருகருகே அமரும் பிறமனிதர்களோடு எந்தளவில் தொடர்பு கொள்கிறானோ அப்படியொரு வாழ்க்கை பயணத்திலேதான் உறவுகளும்.

அதற்காக இவர்களையெல்லாம் விட்டுவிடு, இவர்களையெல்லாம் வெறுத்துவிடு என்றெல்லாம் யாம் கூறவில்லை.

இந்த நிலையிலே அவர்களுக்கு செய்யவேண்டிய நீதியான, நியாயமான கடமைகளை செய்வதோடு மனதளவிலே எந்தவிதமான பற்றுக்கும் இடம் தராமல் வாழ கடினம் பாராது முயற்சி செய்யவேண்டும்.

இந்த கருத்தை நன்றாக மனதிலே வைத்துக்கொண்டால் ஒவ்வொரு மனிதனும் செழுமையாக வாழ்ந்து இறைவனின் அருளை புரிந்துகொள்ளக்கூடிய அந்தவொரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ளலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 1 ஆகஸ்ட், 2026

துளிகள் - 38 - குற்றம் தண்டனையின்றி தப்பாது — கர்மம் தன் நேரத்தில் செயல்படும்!


அடிப்படையில் லோகாயத விஷயங்களுக்காக வாழக் கற்றுக் கொண்ட மனிதன், எந்த குற்றத்தையும் செய்யத் தயங்குவதில்லை. குற்றம் செய்கின்ற யாருக்கும், எக்காலமும் இறைவன், உடனடியாக தண்டனை வழங்கியதாக சரித்திரம் இல்லை. இதைத்தான், மனிதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 37 - நன்றும் தீதும் பிறர் தர வாரா — கர்மத்தின் மாறாத சத்தியம்!


பாவங்கள் செய்வதால் ஒரு ஆன்மாவை மனித தேகம் எடுக்க வைத்தோ அல்லது விலங்கு தேகம் எடுக்க வைத்தோ கடுமையாக தண்டிப்பதில் இறைவனுக்கு என்ன லாபம் ? ஒரு மனிதன் கண்ணீர் சிந்தினால் அதனால் இறைவனுக்கு ஏதாவது லாபமா ?  

மூதுரை ஒன்று இருக்கிறதல்லவா! ‘ நன்றும், தீதும் பிறர் தர வாரா ‘ என்று. ஒருவன் நுகர்வதெல்லாம் அவன் என்றோ செய்தவைதான். இன்றொருவன் எல்லா வகையிலும் நிம்மதியாக வாழ்கிறான் என்றால் அவன் அதற்கேற்றாற்போல் முந்தைய பிறவிகளில் உழைத்திருக்கிறான் என்று பொருள். ஒருவன் எல்லா வகையிலும் நிம்மதியிழந்து வாடுகிறான் என்றால் அதற்கேற்றாற்போல் அவன் விதைகளை விதைத்திருக்கிறான் என்பது பொருளாகும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

செவ்வாய், 28 ஜூலை, 2026

துளிகள் - 36 - தர்மத்தில் தியாகம், வாழ்வில் சத்தியம் — அதுவே இறைவன் விரும்பும் பாதை!


கோடி, கோடியாக அள்ளிக்கொடுத்த தர்மனை விட, பல நாள் பட்டினியாகக் கிடந்த அந்த அந்தணன், தன் பசி, தன் குடும்பப் பசி அனைத்தையும் மறந்து, வந்திருந்த முனிவருக்குத் தந்த அன்னமே உயர் அன்னமாகி, அதுவே உயர் தர்மமாகிவிட்டது. தர்மம் என்பது அளவைப் பொறுத்ததல்ல. சத்தியம் என்பது சூழ்நிலையைப் பொறுத்ததல்ல. விளைவு, இருக்கும் சூழல் — இவற்றைப் பொறுத்ததே.

இருப்பதில் கொடுப்பது சிறப்பு என்றால், இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.

உயர்ந்த கருத்துக்களைக் கேட்பதும், மனதில் பதிய வைப்பதும், சத்சங்கம் நடத்துவதும் மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றவும் முயல வேண்டும்.

"இதெல்லாம் யாரால் இயலும்? கலிகாலத்தில் இதெல்லாம் சாத்தியமா? உயர்ந்த பழக்கவழக்கங்கள் கேட்பதற்கும், ஓதுவதற்கும், விவாதம் செய்வதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பின்பற்றக் கடினமாக உள்ளது" என்று ஒருவன் கூறினால், நல்லவனாக, உயர்வானவனாக வாழ்வது எளிது என்றால், அனைவரும் அவ்வாறு வாழ்ந்துவிட்டு போவார்களே? அது கடினம் என்பதால்தான் அதற்குரிய மரியாதையும் அதிகமாக இருக்கிறது.

ஏன்?

செல்வம் திரட்டுவதைவிட கடினம் இந்தக் காலத்தில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது.

ஆக, "இதனால் நான் இந்தத் தவறை செய்தேன். இந்த சூழ்நிலையால் நான் அடிபணிந்து போக வேண்டியிருந்தது" என்று எந்தக் காரணமும் கூறாமல், ஒரு மனிதன் சத்தியவானாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் செல்லத் தொடங்கிவிட்டால், இறைவன் அவனை நோக்கி வருவான் என்பது உறுதி.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

திங்கள், 27 ஜூலை, 2026

துளிகள் - 35 - பரிபூரண சரணாகதியே துன்பங்களிலிருந்து மீளும் வழி!


எமை நாடிய ஆத்மா பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக இந்தப் பிறவியிலே இப்படியொரு சிக்கலில் இருக்கிறது. இந்த ஆத்மாவை மன்னித்து இந்த ஆத்மாவிற்கு நல்லதொரு வழியைக் காட்டவேண்டும் என்றுதான் யாமும் பிரார்த்தனை செய்து அந்த இறைவனிடம் முழு சரணாகதி செலுத்தி, அந்த பரந்த பரம்பொருள் எதை உணர்த்துகிறதோ அதை எமை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்துகிறோம். ஆயினும் கூட ஒரு துன்பம் வந்த உடனேயே சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் அந்த துன்பம் போய்விடாதா ? என்ற ஏக்கம்தான் மனிதனிடம் இருக்கிறது. கடுமையான பாவவினைகளின் காரணமாகத்தான் ஒரு மனிதனுக்கு கடும் வியாதியும், கடுமையான தன சிக்கலும், ருணமாகிய கடனும், கடும் பொருளாதார நெருக்கடியும், உறவு சார்ந்த சிக்கல்களும் இன்னும் பிற துன்பங்களும் வருகிறது. எனவே ஒரு மனிதன் தன் வாழ்வியல் முயற்சிகளோடு பரிபூரண சரணாகதி பக்தியையும் வளர்த்துக்கொண்டால் கட்டாயம் மெல்ல, மெல்ல அவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம். 

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 24 ஜூலை, 2026

துளிகள் - 34 - குருவை வெளியில் தேடாதே உள்ளே தேடு!


மனித உருவில் குரு வேண்டுமென்று பல மனிதர்கள் நாடுகிறார்கள். நன்றாக புரிந்து கொண்டிட வேண்டும். மனித வடிவிலே சிறந்த குருமார்கள் இல்லாமலில்லை. ஆனால் அதை ஒரு மனிதன் தன்னுடைய முன்ஜென்ம பாவங்களை குறைத்து, அதனையும் தாண்டி ஆன்மீக தாகம் எடுத்து, அதை நோக்கிய சிந்தனையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத நிலையில் இறைவனாகப் பார்த்துதான் தக்க குருவை அனுப்பி வைப்பார். எனவே மனித வடிவில் குருவைத் தேடி காலத்தை விரயம் ஆக்கிட வேண்டாம். சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும். அதைக் கற்றுக் கொண்டு தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக அமைதியாக முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து அமைதியாக, மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து எஃது நடந்தாலும், சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும், சிந்தனை எங்கு அலைந்து, திரிந்து, திளைத்து சென்றாலும், எத்தனை குழப்பம் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்கப் பழக வேண்டும். ஒரு சிந்தனை தவறு என்றால் அந்த சிந்தனை இன்னொரு மனிதனிடம் அதிலும் ஆன்மீக வழியில் வரும் மனிதனிடம் இருந்தால் இவன் ஏற்றுக்கொள்வானா ? என்று பார்த்து, இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால், பிறரிடம் இந்த சிந்தனையிருந்தால் அவனை மதிக்க மாட்டோம் என்றால் நம்மிடம் மட்டும் ஏன் இந்த சிந்தனை ? என்று ஆராய்ந்து பார்த்து, இவனை இவனாகவே பகுத்துப் பார்த்து, இவனை இவன் சரி செய்து கொண்டால் மெல்ல, மெல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 19 ஜூலை, 2026

துளிகள் - 33 - ஏன் இந்த பிறவியில் கஷ்டம்? - கர்ம வினையும் இறை நீதியும்!


எல்லாப் பிறவிகளிலும் ஆத்மா ஒன்றாக இருந்தாலும் ஏதோ ஒரு பிறவியில் உடல் செய்த பாவத்தின் பலன்களை இப்பிறவி உடல் ஏன் அனுபவிக்க வேண்டும் ? ஏனென்றால் இப்பிறவியில் வாய்த்த உடல் எந்த பாவங்களும் செய்யவில்லையே ?

நீ கேட்கின்ற கேள்வியை சுருக்கமாக நான் கேட்கிறேன். எந்த மன நிலையில், எந்த உணர்வில் ஒரு மனிதன் தவறு செய்கிறானோ அந்த உணர்வு இருக்கும்பொழுதே அவனுக்கு தண்டனையை கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லை. தான் யார் ? என்ன குற்றம் செய்தோம்? என்று தெரியாமலேயே ஒருவன் தண்டனை அனுபவிக்கிறானே, இது நியாயமா ? என்று கேட்கிறாய். இதுதானப்பா உச்சகட்ட தண்டனையே. ஒருவன் ஆரோக்கியமாக, சொத்து சுகத்தோடு இருக்கிறான். நல்ல பதவியில் இருக்கிறான். அப்படி அவன் இருப்பதற்கு காரணம் இறைவன் அவனுக்கு தந்திருக்கிறார். அப்பொழுது அவன் என்ன செய்ய வேண்டும் ? மேலும், மேலும் நற்பணிகளை செய்ய வேண்டும். யாராவது செய்கிறார்களா ? எத்தனை மகாராஜாக்கள் எத்தனை அட்டூழியங்களை செய்தார்கள் ? எத்தனை ஜமீன்தார்கள் எத்தனை தீய காரியங்களை செய்தார்கள் ? இப்படியெல்லாம் செய்துவிட்டு, அந்தப் பிறவியின் புண்ணியத்தை, ஓட்டை பாத்திரத்தில் நீரை வழிய விடுவதுபோல விட்டுவிடுகிறான். புண்ணியத்தால் பெற்ற செல்வத்தையும், பதவியையும் மேலும் நன்மைக்கு பயன்படுத்தாமல், ஒரு சிலர் தவிர, மற்ற அனைவருமே தவறுகளுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள். என்னென்ன அட்டூழியங்கள் எல்லாம் இந்த மனிதன் செய்கிறான் தெரியுமா ? சற்று பணமும், பதவியும் வந்துவிட்டால், சொல்வதை கேட்பதற்கு சில எடுபிடிகள் கிடைத்துவிட்டால் போதும், இவன் செய்வதெல்லாம் அட்டூழியம்தான், அயோக்கியத்தனம்தான் , பாவங்கள்தான். சொத்துக்காக பிறரை துடிக்க, துடிக்க வதைத்து கொல்வான். காண்கின்ற பெண்களையெல்லாம் மஞ்சத்திற்கு அழைப்பான். இப்படியெல்லாம் செய்து புண்ணியம் தீருகின்ற சமயத்திலே அவனுக்கு அகவை முதிர்ந்துவிடும். பால்ய காலத்தில் செய்த பாவங்கள் அவன் உடலையும், உள்ளத்தையும் தாக்கும். அப்பொழுதுதான் அவனுக்கு ஞானம் வரும். துன்பம் வரும்பொழுதுதானே ஞானம் பிறக்கிறது. ‘ இறைவா ! தெரியாமல் செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடு, எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடு “ என்று கெஞ்சுவான், கதறுவான். அதன் பிறகு அவன் திருந்தினாலும் வாழ்வதற்கு அவன் ஆன்மா இருக்கும், உடல் இருக்காது . என்ன செய்வது ? மீண்டும் ஒரு பிறவி எடுக்கிறான். புதிய உடல் தரப்படுகிறது. பழைய நிகழ்வுகள் எல்லாம் மறைபொருளாக மறைக்கப்படுகிறது. அவன் என்ன வேண்டினான் ? செய்த பாவங்கள் எல்லாம் தீரவேண்டும் என்று. பாவங்களை தீர்ப்பதற்காகத்தான் அவனுக்கு கஷ்டங்கள் கொடுக்கப்பட்டு, கொடுக்கப்பட்டு, எந்தெந்த வழிகளில் பாவங்கள் செய்தானோ அந்தந்த வழிகளில் அவைகளையெல்லாம் நீக்கி அவனை சுத்தி படுத்தும் வேலை துவங்குகிறது. இந்த சுத்தி படுத்தும் வேலை ஒரு பிறவியில் துவங்கி ஓராயிரம் பிறவிகள் வரை தொடரும். ஒரு பிறவியிலேயே நிறைவாகும். அது, அந்தந்த ஆன்மாக்களின் மனோதிடத்தை பொறுத்தது, மனோ பலத்தை பொறுத்தது.
இறை இந்த நீதியை காரண, காரியமில்லாமல் வைக்கவில்லை. அது மட்டுமல்ல, நீ எண்ணுவதுபோல் அந்தந்த பிறவியில் செய்த தவறுகளுக்கு அந்தந்த பிறவியிலேயே தண்டனை இல்லை என்று மட்டும் சொல்லாதே. அந்தந்த பிறவியிலும் தண்டனை உண்டு. ஆனால் யாருக்கு தண்டனை வரும் தெரியுமா ? சிறிதளவு பாவங்கள், அதிகளவு புண்ணியம் வைத்திருக்கும் ஆத்மாக்கள் சற்று தவறு செய்தாலும் போதும், உடனேயே இறை குறுக்கிட்டு “ ஆஹா ! என் பையன், என் சேயவன் தவறான வழியில் செல்கிறானே “ என்று உடனடியாக தண்டித்து, கட்டி, இழுத்து விடுவார். ஆனால் பெருமளவு பாவச்சேற்றிலே அமிழ்ந்திருக்கும் மனிதனை ‘ இவனை விட்டுத்தான் பிடிக்க வேண்டும் . இவன் என்னை உணர்வதற்கு இன்னும் பல பிறவிகள் இருக்கிறது ‘ என்பதால் இவனை இவன் போக்கிலேயே விட்டு, அவன் உணரும் பிறவி வரும்பொழுது இறை எம்போன்ற மகான்களை அனுப்பி அவனுக்கு நல்லவைகளை எடுத்துரைத்து அவனை தன் பக்கம் இழுத்துக் கொள்ளும்.
எனவே எந்த பிறவியில், எந்த உணர்வில் ஒரு மனிதன் தவறு செய்தாலும் அந்த உணர்விற்கு அவன் வந்துவிடுவான் அந்த தண்டனை கிடைக்கும்பொழுது. அது அவனவன் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.

அப்பனே ! ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் பேறு, அது நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, இன்பம், துன்பம் எல்லாவற்றையும் இறை தீர்மானிப்பதில்லை. அந்தந்த உயிர்தான் தீர்மானித்துக் கொள்கிறது. அந்த உயிர் அறியாமையால் சில விருப்பங்களை மனதில் வளர்த்துக் கொள்கிறது. அந்த விருப்பங்கள் நிறைவேறும் வரை அதற்கு அமைதி கிடைப்பதில்லை. எனவேதான் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு வருமாறு இறைவன் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார். ஏனென்றால் அணிந்திதை, கமலினி கதை தெரியுமா உனக்கு ? கயிலையிலே சுந்தரர் இருந்தபொழுது, ஒரு கணம் கூட இல்லை, அம்பிகையின் தோழிமார்கள் அழகாக இருக்கிறார்களே ? என்றுதான் நினைத்தார். அப்படி நினைத்த உடனே “ பூமிக்கு செல், அதை முடித்துவிட்டு வா. அதற்கான இடம் இதுவல்ல.இது காமனை எரித்த இடம் . இங்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அதற்குரிய இடம் பூமி “ என்று அனுப்பி விடுகிறார் இறைவன்.
அப்படித்தான், கர்ணனின் மனோ நிலை வேறு, மஹாபலியின் மன நிலை என்பது வேறு. எந்தவொரு அசுரனும் நன்மை மட்டுமல்ல, தீமையும் கலந்துதான் செய்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மஹாபலி பெற்ற பேறு, வேறு யார் பெற முடியும் ? கர்ணன் காட்சியைதானே கண்டான். மஹாபலி திருவடி தீக்ஷையை அல்லவா பெற்றிருக்கிறான்? மஹாபலியின் பிள்ளை செய்யாத அட்டூழியம் இல்லை. இருந்தாலும்கூட அவனும் திருவடியால் தீண்டப்பட்டு வானத்திலே நிரந்தரமாக இருக்கும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறான். எனவே அவரவர்கள் விருப்பத்தை, ஆசையை அந்தந்த காலகட்டங்கள் வரும்பொழுது இறை நிறைவேற்றி விடுகிறது.
 
 திருக்கடையூரில் எமனை எட்டி உதைத்ததாகத்தானே வரலாறு ? எமன் அதற்காக எத்தனை காலங்கள் *தவம்* செய்தார் என்று யாருக்காவது தெரியுமா? முக்கண்ணனின் திருவடியால் தீண்டப்பட வேண்டும், உதை வாங்க வேண்டும், அந்த பெரும்பேறு எனக்கு வேண்டும் இறைவா ! என்று பல்லூழி ஆண்டு காலம் செய்த தவத்தின் பயன்தான் திருவடி தீக்ஷையானது அவருக்கு அங்கே மார்கண்டேயர் மூலம் கிடைத்தது. எனவே இறையின் செயல்களை வெளிப்படையாக பார்த்தால் ஒன்று நன்மை போல் தோன்றும். ஒன்று தீமை போல் தோன்றும். ஆனால் அதன் முடிவு அந்தந்த ஆத்மாவிற்கு நன்மையாகத்தான் முடியும். எனவே இரண்டுமே அந்தந்த ஆத்மாக்களின் ஆசைதான், தாகம்தான். அதை அந்தந்த கால கட்டத்திலே எப்படி நிறைவேற்ற வேண்டுமோ, இறை அப்படி நிறைவேற்றி விடுகிறார்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 32 - கலியுக கடவாளான முருகப் பெருமான் அருள் பெற யாது செய்தல் வேண்டும்?


நலம் உண்டாகும். நமசிவாயம். நன்னெறியான வாழ்வின் பயணத்தில் பல பிறவிகள் புண்ணிய செயல்கள் செய்து இறைவனின் திருவுள சம்மதம் படி உலகோர்க்கு தொண்டு செய்து உள்ளொளி விளங்கும் பாக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே.. அம்பிகை அருளால் ஆறுமுகத்தின் அருள் வாய்க்கப் பெறும். பேரியக்கத்தின் அருளாணை இருத்தலும், அவசியம் ஆகிறது.. பரம் பொருளின் வடிவான சிவம் வேறு அல்ல அங்கிருந்து வெளிப்பட்ட ஆறுமுகம் வேறு அல்ல என்ற தெளிவும் வேண்டும்.. கருணாமூர்த்தி ஆக மனம் விளங்குவதும், மெய்யை காப்பதும், இன்ப துன்ப நிலைகளிலும் மனம் சமநிலையில் இருத்தலும், மெளன மொழியில் அகத்தில் அனுபூதியை பெறுதலும் உணர்வின் கண் கொண்டு வைரம் போன்ற நெஞ்சுருதி வாழ்தலும், பிறவிப்பிணி அகற்றி அகத்தே ஆறுமுக சிவத்தை அருள செய்யும். உண்பதும், உறங்குவதும், பொருள் தேடுவதும் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து வேலவனை வணங்குவதை வேலையாக கொண்டு அவன் தன் பணியை உணர்ந்து செய்து வந்தாலே போதும் அப்பனே!! உள்ளும் புறமும் சிவமாக நல் ஆசிகள்!

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

துளிகள் - 31 - பணிந்த மனமே பரிபூரண இறையருளைப் பெறும்!


தளராத பக்தி, தடைபடாத தர்மம், தவறாத தர்மம் என்றென்றும், என்ற வழியிலே மாந்தர்கள் செல்லச் செல்ல, இறைவனின் பரிபூரண அருளும் தொடருமப்பா. அப்பனே! இகுதொப்ப நலம் எண்ணி, நலம் உரைத்து, நலமே செய்ய, என்றும் நலமே நடக்கும், என்று யாம் காலாகாலம் கூறிக்கொண்டே இருக்கிறோம். ஆயினும், மனிதனின் மனதிலே உறுதியின்மையும், தெளிவு இல்லாததாலும், லோகாயதம், அழுத்தம், திருத்தமாக பிடித்துக் கொண்டிருப்பதாலும், உடனடியாக ஆதாயத்தை எப்பொழுதுமே மனிதமனம் எதிர்பார்ப்பதாலும்தான், அனைத்து குறுக்கு வழிகளையும் மனிதன் கையாளுகிறான். நீக்கமற நிறைந்துள்ள இறைவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கிற ஒரு உணர்வு உண்மையாகவே, ஒரு மனிதனுக்கு அழுத்தம் திருத்தமாக இருக்குமேயானால், அவன் "யாரும் பார்க்கவில்லை" யாருக்கும் தெரியவில்லை, நான் இடர் படுகிறேன், எனவே இந்த தவறை செய்யலாம், என்னை விட அதிக தவறு செய்யக்கூடிய மனிதன் நன்றாகத்தானே இருக்கிறான். எனவே, நான் தவறு செய்யலாம். அது தவறில்லை, என்ற வாத பிரதிவாதங்களை தமக்குள் வைத்துக் கொண்டு, தவறான வழியில் சென்று கொண்டே இருக்கிறான். 

ஆயினும் கூட, இறைவன் பார்க்கிறார், பார்க்கவில்லை, மற்றவர்கள் அறிகிறார்கள், அறியவில்லை, அவனவன் மனமே சாட்சியாக வைத்து, ஒரு மனிதன் நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தாலே, அம்மனிதனுக்கு இறை வழிபாடுகூட தேவையில்லை எனலாம். நன்றான இறைவழிபாட்டையும் நன்றான பாசுரங்களையும் ஓதுவதோடு ஒரு மனிதன் நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி, அப்பழுக்கற்ற மனிதனாக, எல்லோருக்கும் நலத்தை செய்யும் புனிதனாக, போராடியாவது வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இகுதொப்ப நல்ல வழியைத் தொடர்ந்து கடைபிடித்தாலே இறைவன் அருள் பரிபூரணமாகத் தொடரும். இல்லையென்றால், வெறும் சடங்குகளை மட்டும் செய்துகொண்டே இருக்கக்கூடிய, ஒரு சராசரி மனித நிலைதான் அங்கு நிற்கும். எனவே, இறைவனை வணங்கவும், தர்மங்களை செய்யவும், சத்தியத்தை பேசவும் மட்டுமல்லாது, அடிப்படை மனித நேயத்தை மறந்து விடாமல் வார்த்தைகளில் பணிவு, செயல்களில் பணிவு, தேகத்தில் பணிவு, பார்வையில் பணிவு, என்று ஐம்புலனும் ஆதாரமாக இருக்கும் மனம் பணிய, மனதோடு இருக்கும் ஆத்மா பணிய, இப்படி பணிதலே இறைவனருளை பரிபூரணமாகப் பெற்றுத்தரக்கூடிய நல்லதொரு உயர் நிலையாகும். எனவே, பணிதல் என்பது இறங்குதல் அல்லது தாழ்ந்து போதல் என்ற பொருள் அல்ல. வேடிக்கையாகக் கூறப்போனால் நிறை காட்டும் நிறை காட்டுமனி துலாக்கோல், அதை கவனித்தால் தெரியும். எங்கே அதிக கன பரிமாணம் இருக்கிறதோ, அந்தத் தளம் தாழ்ந்தே இருக்கும். கன பரிமாணம் இல்லாத அடுத்த தளம் உயர்ந்தே இருக்கும். இப்பொழுது அது உயர்ந்து இருப்பதால், மெய்யாக அது உயர்ந்ததா? இன்னொரு தளம் தாழ்ந்து இருப்பதால், மெய்யாகவே அது தாழ்ந்ததா? எனவே முற்றிய பயிர் தலை கவிழ்ந்தே இருக்கும். ஆங்கே நிறை குடம் தளும்பாது இருக்கும். இவற்றையெல்லாம் மனிதர்கள், குறிப்பாக எமது வழியில் வரக்கூடியவர்கள் புரிந்து கொண்டு வாழ இறைவன் அருளும் தொடர்ந்து கொண்டே வருமப்பா!

வாக்குரைத்தவர் :அகத்தியப்பெருமான்!

சனி, 18 ஜூலை, 2026

துளிகள் - 30 - உணர்ந்து திருந்துவதே இறைவனின் விருப்பம்!


ஒவ்வொரு ஆன்மாவும் பிறவியெடுத்ததின் நோக்கம், பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும், புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும்கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள் தோறும் இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும், துயரமும், மனவேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவதுபோல தவறு செய்யும்பொழுதே ஒரு மனிதனை தடுத்துவிடலாமே ? தண்டித்து விடலாமே ? என்ற பார்வையிலே பார்த்தால், இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன் ? அதைவிட படைக்கும்பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும். நல்லதையே எண்ணவேண்டும், நல்லதையே உரைக்கவேண்டும் நல்லதையே செய்யவேண்டும் என்று இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே? ஆனால் அவ்வாறு இல்லாமல் இஃதொப்ப நிலையிலே மனிதர்களுக்கு எல்லாவகையான சுதந்திரங்களையும் தந்து, அவனை, பல்வேறு தருணங்களில் அவன் போக்கிலேவிட்டு ‘ இஃது நல்லது, இஃது தீயது, இஃது தக்கது, இஃது தகாதது ‘ என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து, இயல்பாக ஒருவன் நல்லவனாக மாறவேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன் அதாவது தான் கண்காணிக்கப்படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ, அச்சத்தினாலோ அல்லது வேறு எஃதாவது உபாதை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 29 - தடைகள் வந்தாலும் தர்மத்தை விடாதே!


கொடுத்துக்கொண்டேயிரு. காற்று எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் வீசுகிறதோ, சூரிய ஒளி எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் படுகிறதோ, மழை எவ்வாறு நல்லவன், தீயவன் என்று பாராது பொழிகிறதோ அதைப்போல பொதுவாக செவியில் பிறர் குறை விழுந்த உடனோ அல்லது தெரிந்த உடனோ உன்னால் முடிந்தவரை முயற்சி செய்து தீர்த்துக்கொண்டேயிரு. 

இதில் எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை ஏளனங்கள் வந்தாலும் அதையெல்லாம் அமைதியாக ஏற்றுக்கொண்டேயிரு. ஏனென்றால் ஒருவகையில் தர்மம் செய்வது எளிது. இன்னொரு வகையில் கடினம். எப்பொழுது கடினம் ? தர்மம் செய்ய, செய்ய, இறைவன் சில சோதனைகளை வைப்பார். அதையெல்லாம் தாண்டி இந்த ஆத்மா வருகிறதா ? என்று பார்ப்பார். உடன் இருப்பவர்களை வைத்தே எதிர்ப்பு காட்ட வைப்பார். ‘ இப்படி கொடுத்துக்கொண்டே போனால் நாளை உனக்கு ஒரு தேவை என்றால் என்ன செய்வாய் ? என்பதுபோன்ற அச்சமூட்டும் வினாக்களையெல்லாம் பிறரை கேட்க வைப்பார். இதுபோன்ற தருணங்களிலெல்லாம் மனம் தடுமாறாமல், சோர்வடையாமல் தொடர்ந்து நல்ல வழியில் சென்றுகொண்டே இருக்கவேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 28 - விரும்பியதை விலக்கும்போதுதான் ஆன்மப் பயணம் தொடங்குகிறது!


நல்ல கர்மாக்களின் எதிரொலியால் விளைகின்ற நல்ல விஷயங்களை மனிதன் அனுபவித்து போகட்டும் என்று இறைவன் உத்தரவிட்டாலும், அவன், அதிலேயே ஒட்டி நின்று ஆன்ம வழியை காணாமல், இகபர விஷயங்களுடன் ஒட்டிக்கொண்டு விடுகிறான். ஆகவே, சிறப்பாக இருந்தவனைக் கூட சில நேரங்களில் யாங்கள் கீழே இறக்க வேண்டி உள்ளது. மனம் பக்குவம் அடைவது என்பது அத்தனை எளிதல்ல. மனிதன் எப்பொழுது, மிக விரும்பி அடைந்த விஷயத்தை கூட வேண்டாம் என விலக்கி வைக்க தொடங்குகிறானோ, அந்த நொடி முதல் எங்கள் பாதையில் நடக்க தொடங்கிவிட்டான் என்று பொருள்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 27 - பிறருக்காகப் பிரார்த்திப்பவன், இறையருளின் பாதையை அடைவான்!


நாடி மீது நம்பிக்கை வந்து, தர்மத்தின் மீது நாட்டம் வந்து சத்தியத்திலும் பிடிப்பு வந்தால், இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் ஜீவ அருள் ஓலை மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும் என்று யாம் எண்ணினாலும், எம்மைப் பொருத்தவரை ஒருவன் தீய வழியில் சென்றாலும், நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல் வழிப்படுத்த வேண்டியது எமது கடமை என்றாலும் இறைவன் அனுமதித்தால் நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிரார்த்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மனிதர்களுக்கு புண்ணியம் சேர்த்துக்கொள்ள எத்தனையோ வழிகளை இறைவன் அளித்துள்ளான். அதில் ஒன்று பிறருக்கான பிரார்த்தனை. முகம் பாராமல் பிறர் துன்பங்களுக்கு பிரார்த்திப்பவன், விரைவில் எங்கள் அருகில் வருவான். யாமும் வழிநடத்துவோம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 17 ஜூலை, 2026

துளிகள் - 26 - இறைவனுக்கு பிடித்தபடி வாழ்ந்தால், சித்தர்களே உங்களைத் தேடி வருவார்கள்!


ஒருவனுக்கு ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றால், அவனுக்கு, சித்தர்கள் மீதும், இறைவன் மீதும் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவனுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு வழியாக உள்புகுந்து செய்தியை அவனுக்கு தெரிவித்து விடுவோம். அதற்கு, ஓலைச்சுவடியோ, நேரில் தோன்றவேண்டும் என்பதோ தேவை இல்லை!

எனவே, ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தால், இறைவனுக்கு பிடிக்குமோ, அதை கண்டுபிடித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், எங்கள் தரிசனமும், அருகாமையும் இயல்பாக கிடைக்கும். அனைத்தும் ஒரு மனிதன் நடந்து கொள்வதில்தான் உள்ளது.

வாக்குரைத்தவர் அகத்தியப்பெருமான்!

துளிகள் - 25 - நல்லதைச் செய்யும்போது மனக்குழப்பம் வந்தால், பாவம் இன்னும் குறையவில்லை என்று பொருள்!


யார் என்ன கூறினாலும் மனக்குழப்பம் அடையாமல் நாங்கள் முன்பே கூறியது போல், தவறை செய்கின்ற மனிதன் தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து, பாவத்திற்கு மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் யார் சொன்னாலும் கேட்கிறானா ? யார் சொன்னாலும் தன்னை மாற்றிக்கொள்கிறானா ? தவறு செய்கின்ற மனிதனுக்கு இருக்கின்ற உறுதி ஏனடா நல்லது செய்கின்ற மனிதனுக்கு இல்லாமல் போகிறது ? ஏன் தடுமாற்றம் வருகிறது ? ஏன் குழப்பம் வருகிறது ? அங்கு இப்படி கூறுகிறார்கள், இங்கு இப்படி கூறுகிறார்கள், இதை இப்படி நம்பவேண்டும், அதை அப்படி நம்பவேண்டும், இங்கு கூறுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை என்றெல்லாம் ஏன் குழப்பம் வருகிறது ? குழப்பம் வருகிறது என்றாலே பாவங்கள் இன்னும் இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே தொடர்ந்து அறவழியில். சத்யவழியில் அனைவரும் வர நல்லாசிகள்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

துளிகள் - 24 - விதியை மாற்ற மகான்கள் போராடியும் மனிதன் ஏன் மாறுவதில்லை?


இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப மனிதர்களின் உலக வாழ்வு எக்காலத்திலும் என்றென்றும் விதிவசம்தான் என்பது எம்போன்ற மகான்கள் அறிந்த ஒன்றுதான். இவைகளைத் தாண்டி மனிதர்களை ஓரளவு மெல்ல, மெல்ல மேலேற்ற, கடைத்தேற்ற, கரையேற்ற இறைவழி, அறவழி அழைத்து செல்லவே மகான்கள் காலகாலம் போராடுகிறார்கள். ஆயினும்கூட யாம் அடிக்கடி இயம்புவது போல பெரும்பாலான பொழுதுகளில் விதிதான் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது. இஃதொப்ப சராசரியாகவே வாழ்ந்து உண்டு, உறங்கி எஃதும் தெரியாமல் வெறும் புலன் கவர்ச்சிக்கு மயங்கி வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகளைத் தாண்டி இறை என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகின்ற கூட்டம் ஒருபுறம். இந்த இரண்டையும் தாண்டி ஒரு குருவை நாடுவோம். குருவை தொட்டு, தொட்டு மேலேறுவோம் என்று வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஓலைகளிலே சித்தர்கள் வாக்கு உரைக்கிறார்கள். அதனைக் கேட்டு வாழ்க்கையின் துன்பங்களை நீக்கிக்கொள்வோம். அஃதோடு உண்மையான ஞானவாழ்வையும் அறிந்துகொள்வோம் என்று இருக்கின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும்விட இதில் எந்த நிலையில் ஒரு மனிதன் நின்றாலும் அவன் மதியில் விதி அமர்ந்துகொண்டு ஆட்டுவிக்கிறது என்பது உண்மை.

அந்த விதியை மாற்றத்தான் யாங்களும் எங்கள் நிலையிலிருந்து மிக,மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில் பல்வேறுவிதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே ஏறத்தாழ 9 ஆண்டுகாலம் எந்தவிதமான ( பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா என்ற ) கணக்கினையும் பார்க்காமல், இன்னும் கூறப்போனால் புண்ணியம் அதிகம் செய்த, செய்கின்ற ஆத்மாக்களைவிட பாவங்களை அதிகம் சுமந்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களுக்கும் சேர்த்து வாக்குகளை விதவிதமாக உரைத்திருக்கிறோம். ஆயினும்கூட எப்படி ஒரு செவிடன் செவியிலே எதைக்கூறினாலும் ஒன்றும் நுழையாதோ அதைப்போலதான் நடந்துகொண்டிருக்கிறது. இயல்பாக சாத்வீகமாக எதையும் நல்லவிதமாக பார்க்கக்கூடிய தன்முனைப்பு குறைந்த ஆத்மாக்களை கரையேற்றுவது என்பது எளிது. அதாவது ஏற்கனவே நன்றாக படிக்கக்கூடிய மாணாக்கனை மேலும் நன்றாக படிக்கவைப்பது போல. ஆனால் சற்றும் கல்வி ஏறாமல் திணறிக்கொண்டு இருக்கக்கூடிய, கல்வி என்றாலே வெறுக்கக்கூடிய ஒரு மாணவனை மேலேற்றுவதுதான் ஆசிரியருக்கு சவாலாக இருக்கும். அந்த வழிமுறையையும் நாங்கள் கையாண்டு இங்கு வருகின்ற பலருக்கு தராதரம் பார்க்காமல் நாங்கள் வாக்கைக் கூறியது உண்டு. ஆயினும்கூட வழக்கம்போல் விதி வென்று அவர்கள் (விதிப்படி) வாழத்தான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. இறைவன் தந்த அறிவை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தாத மனிதன் எந்த இடத்தில் பயன்படுத்தக்கூடாதோ அந்த இடத்தில் பயன்படுத்துகிறான். சதாசர்வகாலம் மிருகவெறி கொண்டு அலைவதும், தன்முனைப்பும், ஆணவமும் கொண்டு அலைவதும், நல்ல புண்ணியம் செய்கின்ற ஆத்மாக்கள் மனம் நோக நடந்துகொள்வதும்தான் இங்கு வருகின்ற பெரும்பாலான ஆத்மாக்களின் இயல்பாக இருக்கிறது. கடும் சினமும், ஆணவமும் கட்டாயம் உலக வாழ்க்கையை மட்டுமல்ல மேலுலக வாழ்க்கையைக்கூட தராது தடுத்துவிடும் என்பதை உணரவில்லை. உணர்ந்தாலும் அதை பெரிதாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

எல்லாம் விதிதான் என்றால் மதிக்கு என்ன வேலை இருக்கிறது ? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான் விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய்விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட மனித வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எஃதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம்தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான் இருந்தாலும் அதனையும் நாங்கள் செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே ? அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே ? என்றுதான். ஆனாலும் வழக்கம்போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வியாழன், 16 ஜூலை, 2026

துளிகள் - 23 - மனிதன் தர்மத்திற்கு கணக்கிட்டால், விதி கணக்குத் தீர்க்கும்!


தான தர்மத்தின் இன்னொரு முகம்!

இறைவன் அருளாலே யாம் உணர்த்துவதை விட விதி நன்றாக உணர்த்திவிடும் அப்பா. இரந்து கேட்கும்பொழுது தராத மனிதனுக்கு இறைவன் கள்வனை படைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தன்னை சுற்றி நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளிலே துன்பப்படும், துயரப்படும் மனிதனைப் பார்த்து அங்கே நல்ல குணத்தை பயன்படுத்த வேண்டும். அங்கே அறிவை பயன்படுத்தக்கூடாது. ‘இவன் உதவி கேட்கிறான். இவனுக்கென்ன ? . தேகம் ஆரோக்யமாகத்தானே இருக்கிறது. இவன் கையேந்துவது தகாதது. இவனுக்கு எதற்கு தரவேண்டும் ? ‘ என்று இவனாகவே ஒரு முடிவிற்கு வருகிறான். அடுத்தவனை பார்க்கிறான் ‘ இவனுக்கென்ன ? இவன் குடும்பத்தில் இவனுக்கு போதிய ஊதியம் இல்லையென்றாலும் உடன் பிறந்தவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் ? அவர்கள் செய்யட்டுமே ? அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு ? நாம் ஏன் இதிலே ஈடுபடவேண்டும் ? ‘ அடுத்து இன்னொருவனை பார்க்கிறான். ‘ இவனுக்கென்ன ? நன்றாகத்தானே இருக்கிறான். இவன் முட்டாள்தனமாக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்துவிட்டால் அதற்கு நானா பொறுப்பு ? நான் எதற்கு அதிலே தலையிடவேண்டும் ? ‘ என்றெல்லாம் மனிதன் தன் கைப்பொருளை இழப்பதற்கு முன்னால் மிக தந்திரமாக சிந்தனை செய்வதில் சாமர்த்தியத்தைக் காட்டுகிறான். பிறகு விதியும் தன் சாமர்த்தியத்தைதான் காட்டுமப்பா. எனவே அப்படியெல்லாம் அள்ளி, அள்ளி தருகின்ற மனிதர்களையே விதி விடுவதில்லை எனும் பொழுது மற்றவர்களின் நிலையை எண்ணிக்கூட பார்க்கத் தேவையில்லை.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

திங்கள், 13 ஜூலை, 2026

துளிகள் - 22 - துன்பம் தொடர்ந்தால் எங்கே தவறு இருக்கிறது என்பதை ஆராயுங்கள்!


நான் சரியாகத்தான் இருக்கிறேன். நான் நேர்மையாகத்தான் நடக்கிறேன். நான் ஒழுங்காகத்தான் எல்லாவகையிலும் வாழ்கிறேன். ஆனாலும் துன்பம் தொடர்கிறது என்றால், ஒன்று இன்னமும் பூர்வீக பாவங்கள் குறையவில்லை என்பது பொருள். அஃதோடு சேர்ந்து, தற்காலத்திலும் அறிந்தும், அறியாமலும் இன்னும் பாவங்களைச் செய்துகொண்டிருக்கிறான் என்றும் பொருளாகும்.

எனவே, அவனவன் தன் மனசாட்சியின்படி, தன்னுடைய நேர்மையைக் கொஞ்சம்கூட ஒதுக்கி வைக்காமல், தன்னைத்தானே ஆய்வுசெய்து பார்த்தால், எங்கே தவறு இருக்கிறது? என்றும், ஏன் வாக்குகள் வரவில்லை? என்பதும் அவனவனுக்கே புரிய வரும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 12 ஜூலை, 2026

துளிகள் - 21 - ராகுகாலம், எமகண்டம், குளிகைக் காலம் – இவற்றை எப்போது பார்க்க வேண்டும்? காரணம் என்ன?


இது போன்ற ஜாதக மற்றும் நேர காலங்களை எல்லாம் ஒரு மனிதன் சுயநலமாக லோகாய ஆதாயம் கருதி செய்யக்கூடிய செயலுக்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பொது நலம் கருதி செய்யக்கூடிய, பொது சேவை கருதி செய்யக்கூடிய, சிகிச்சை அல்லது அவசரமான மருத்துவ உதவி இது போன்ற தருணங்களில் இவற்றை பார்க்கக்கூடாது. எனவே பொதுவான நன்மைகளை கருதி செய்யக்கூடிய காரியங்கள், தர்ம காரியங்கள், வழிபாடுகள், யாகங்கள், ஆலய தரிசனங்கள் இவற்றிற்கு இது பொருந்தாது. சுயநலமாக செய்யக்கூடிய செயல், லோகாய ரீதியாக செய்யக்கூடிய செயல், ஒரு இல்லம் வாங்க வேண்டும், ஒரு வாகனம் வாங்க வேண்டும், புதிதாக ஆடை வாங்க வேண்டும், வீட்டிற்கு ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றெல்லாம் ஒரு மனிதன் முடிவெடுக்கும் தருணம் அவனுடைய ஜாதகத்திற்கு ஏற்ற ஒரு காலமாக பார்த்துக் கொள்வது ஏற்புடையது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 4 ஜூலை, 2026

துளிகள் - 20 - இறப்புக்குப் பின் செய்யப்படும் சடங்குகளின் உண்மையான நோக்கம்!


ஒரு மனிதன் இறந்துவிட்டால் செய்ய வேண்டிய கடமைகளை, சித்தர்கள் நாங்கள் வகுக்கவில்லை. உடலைப் பிரிந்த ஆத்மா, உடலை விட்டதை அறியாமல், மிகுந்த குழப்பத்துடன் அலையும். அதற்கு தனது நிலையை உணர்த்துவதற்காகவே இச்சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.

இளம் வயதுடையவர் ஒருவர் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தில் மிகுந்த அளவில் வருத்தம் சில நாட்கள் இருக்கும். மனவருத்தத்துடன் கோவில்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே முன்காலத்திலிருந்து தடைகளை வைத்திருக்கிறார்கள். நன்றாக வாழ்ந்து, அதிக வயதில் ஒருவர் இறந்தால் அந்தக் குடும்பத்தில் மனவருத்தம் மிகக் குறைந்த நாட்களே இருக்கும். பின்னர் அவரவர் தங்கள் பொறுப்பை நோக்கி நகர்ந்து விடுவார்கள்.

வருத்தம் இல்லை என்றால் கோவிலுக்குச் செல்லலாம் என்பதை உணர்த்துவதற்கே, ஒருவர் இறந்த பின் அந்தக் குடும்பத்தினர், அவரவர் பிரிவின்படி 13 அல்லது 16 போன்ற நாட்களில் கோவிலுக்குச் சென்று வரும் நிகழ்ச்சியைச் சேர்த்துள்ளார்கள். கோவிலுக்குச் சென்று ஸ்வாமியை தரிசிக்கும் பொழுது வேண்டுதல்கள் வைக்கலாம்; தவறில்லை. ஆனால் மனதில் வருத்தம் இருக்கக்கூடாது. வருத்தத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட மன அமைதி இருக்கலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 28 ஜூன், 2026

துளிகள் - 19 - விதியை வெல்லும் வழி – இறைபிரார்த்தனையும் புண்ணிய பலமும்!


விதி தன்னுடைய கடமையை பரிபூரணமாக செய்ய வேண்டும் என்றுதான் நவகிரகங்களிடம் அந்தப் பணி இறைவனால் ஒப்படைக்கப்பட்டு, ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு யுகமும், அந்த யுக தர்மத்திற்கேற்ப அனைத்தும் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலே மகான்கள் ஆனாலும் சரி, ஏன்?, இறைவனே ஆனாலும் சரி, எந்த அளவு தலையிட இயலும்? யாருக்காக தலையிட இயலும்? எந்த ஆத்மாவிற்கு, எந்த காலகட்டத்தில் தலையிட இயலும்? என்றெல்லாம் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. ஆயினும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, சந்தோஷம், நிரந்தரமான திருப்தி இவைகள் கட்டாயம் புறத்தேயிருந்து வருவது அல்ல. ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் இறைவன் தருவதாக வைத்துக் கொண்டாலும், அது கிடைக்க, கிடைக்க அந்த மனிதனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் வருவதற்கு பதிலாக மேலும், மேலும் மன உளைச்சல்தான் வரும். அதே சமயம் விதிக்கு எதிராக சில, சில விஷயங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனருளால் யாங்கள் சில வழிமுறைகளையும், பரிகாரங்களையும் கூறுகிறோம். விதி கடுமையாக இருக்கும்பொழுது அதனை எதிர்த்து போராடுகின்ற மனிதனுக்கு அந்த அளவு புண்ணிய பலமும், ஆத்ம பலமும் இருக்க வேண்டும். சராசரியான பிரார்த்தனைகளும், வழிபாடுகளும், சிறிய தர்மமும் அத்தனை எளிதாக விதியை மாற்றி விடாது. எனவே விதியை மீறி ஒருவன் எண்ணுவது நடக்க வேண்டுமென்றால் மனம் தளராமல் தொடர்ந்து இறை பிரார்த்தனையில் ஈடுபடுவதோடு புண்ணிய பலத்தையும் எல்லா வகையிலும் அதிகரித்துக் கொண்டு, சுய பிரார்த்தனையினால் ஆத்ம பலத்தையும் அதிகரித்து மனம் தளராமல் போராட கற்றுக் கொள்ள வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 27 ஜூன், 2026

துளிகள் - 18 - நற்குணம் கொண்டவருக்கு எல்லா நாளும் திருநாளே!


இறைவனை உள்ளன்போடு ஒரு மனிதன் எப்பொழுதெல்லாம் வணங்குகிறானோ, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வணங்குகிறானோ, அப்படி வணங்குகின்ற அந்த குணம் கொண்ட மனிதன், மனித நேயத்தையும் மறக்காமல் இருக்கிறானோ, மனித நேயத்தோடு தன் கடமைகளையும் சரி வர ஆற்றுகிறானோ, அப்படி வாழ்கின்ற மனிதனுக்கு எல்லா காலமும் பிரதோஷம்தான். எல்லா காலமும் சதுர்த்திதான். எல்லா காலமும் அவனைப் பொருத்தவரை மார்கழி மாதம்தான். எல்லா காலமும் சிவராத்திரிதான். எல்லா காலமும் நவராத்திரிதான். எனவே இது போன்ற திதியின்படி, நக்ஷத்திரத்தின்படி சில விசேஷங்கள் வகுக்கப்பட்டது, அன்றாவது ஒரு மனிதன் தன் புறக்கடமைகளை விட்டு,விட்டு முழுக்க, முழுக்க இறை வழியில் செல்லட்டுமே என்பதற்காகத்தான். எனவே எல்லா தினங்களும் சிறப்பான தினங்களே ஒரு மனிதன் நடந்து கொள்வதைப் பொறுத்து.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 26 ஜூன், 2026

துளிகள் - 17 - என்னை நீ ஆக்கிவிடு – இறைவனிடம் வைக்க வேண்டிய உயர்ந்த பிரார்த்தனை!


இறைவனைக் காண வேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் மனதினுள் இருக்கும். இப்படிப்பட்ட ஆசையை இறைவனிடம் பிரார்த்தனையாக வைக்கும்பொழுதே, "இறைவா! நீ என்னை ஆட்கொண்டுவிடு. எப்படி என்றால், நீ வேறு, நான் வேறு என்று இல்லாமல், நதியானது தனியாக இருக்கும்பொழுது நதியாகவும், கடலில் சேர்ந்த பின் கடலாகவும் மாறிவிடுவது போல, என்னை நீ ஆக்கிவிடு. அந்த இடத்தில் இது நதி, இது கடல் என்று பிரிக்க முடியாது. அதுபோல என்னை நீ ஆக்கிவிடு" என்ற பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தாலே போதும். இறைவன் நிச்சயம் அனைவருக்கும் அருளுவார்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 20 ஜூன், 2026

துளிகள் - 16 - அன்னம் உண்ணும் போது தெய்வங்களை விருந்தாளியாக அழைக்கும் சூட்சுமம்!


அன்னம் உண்ணும் போது கிழக்கு அல்லது மேற்கை நோக்கி அமர்ந்து அன்னபூரணி தாயை தியானித்து, இஷ்ட தெய்வங்களை அழைத்து உடலுக்குள் அமரச் செய்து, மௌனம் கடைப்பிடித்து, இந்த அன்னமானது நல்ல எண்ணங்களைத் தரட்டும், நல்லதைச் செய்கிற சக்தியைத் தரட்டும், தெளிவைத் தரட்டும், ஞானத்தைத் தரட்டும், ஆரோக்கியத்தைத் தரட்டும் என வேண்டிக்கொண்டு தொடர்ந்து உண்டு வந்தால், விருந்தாளியாக அழைக்கப்பட்ட தெய்வம்கூட உள்ளுக்குள் இருந்து அன்னம் உண்பதை நம் மனக்கண்ணில் அல்லது நமது தியானத்தில் சில நாட்களில் காணலாம். அது மிகப் பெரிய ஒரு பாக்கியம் எனக் கூற வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

செவ்வாய், 16 ஜூன், 2026

துளிகள் - 15 - மயானம் கற்பிக்கும் பற்றற்ற வாழ்வின் சூட்சுமம்!


ஆசை அறுக்க வேண்டும், பற்று அறுக்க வேண்டும் என பல கேள்விகளும் இங்கு கேட்கப்படுகிறது. தன்னை அறுக்க தன் வினைகளை அறுக்க சரியான பாடம் மயானத்தில் கற்பிக்க படுகிறது. விரும்பும் ஒருவன், ஒரு இரவு மயானத்தில் அமர்ந்து, தவமாக ஒரு பிணம் எரிந்து அடங்குவதை கண்டு, நடப்பவைகளை உள்வாங்கினால், ஆசையும் பற்றும் அறுப்பதெப்படி என்று உணர முடியும். மனம் ஒன்றுபட்டுவிடும்!

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 14 - தெரிந்தே ஏமாறுதல் - ஒரு கர்ம விடுதலை!


இவ்வுலகில், ஏமாறுகிறவன், ஏமாற்றுகிறவன் என இரண்டு வகை மனிதர்களும் உண்டு. அதிலும் தெரிந்தே ஏமாறுகிறவன் சிறந்த பாக்கியசாலி. எப்படி? ஒருவன் அவனுக்கு விதிக்கப்பட்ட கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும். ஆயினும், ஒருவன் ஏமாற்றப்படும் பொழுது, ஏமாறுகிறவன் உணர்ந்தே இழந்தால், அவனை விட்டு நிறைய கர்மாக்கள் ஏமாற்றுகிறவன் கைக்கு போய்விடும். ஏமாற்றியவன், அதை சுமந்து வருந்தி, இன்னும் நிறைய ஜென்மாக்கள் எடுத்து, எப்படி இந்த கர்மாவை கழிப்பது என்று தெரியாமல் தவிப்பான். இது, இழப்பவன், உணர்ந்த நிலையில் மட்டும்தான் சாத்தியம். உணர்ந்தே இழக்கும் பொழுது, இழப்பவனுள் சாட்சி பூதமாக இறைவனே இறங்கி நின்று கொண்டிருப்பான். ஆகவே, ஏமாற்றுபவன் தப்பிக்கவே முடியாது!

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

புதன், 10 ஜூன், 2026

துளிகள் - 13 - ஆலயத்தில் தோன்றும் தாகமும் பசியும் ஒரு தெய்வீக நிமித்தம்!


கோவில் மற்றும் பெரியவர்களோட சமாதி போன்ற இடங்களில் உள்ளே செல்ல முயற்சிக்கும் போது ஒருவருக்கு தாகம், பசி போன்ற உணர்வுகள் திடீரென தோன்றினால் அது ஒரு நிமித்தம். அங்கு இருக்கும் சக்தியானது, "என்ன வேண்டுமோ கேள், உனக்கு ஆசீர்வதிக்க காத்திருக்கிறேன்" என்று சுட்டிக்காட்டுகிற நிமித்தமாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில் வைக்கக்கூடிய பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறும். இந்த உணர்வும் தெளிவும் ஒரு மனிதனுக்கு இருக்க, அவன் நடந்து செல்கிறான் என்றால் மேலும் ஆன்மீகத்தினுடைய படிகளில் முன்னேறுவதற்கு அது அவனுக்கு வழியைக் காட்டும்.

மிக உயர்ந்த நிலையில் உள்ள பெரியவர்கள் இந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் பொழுது, "இறைவா, நீ இருக்கிறாயே, அது ஒன்றே எனக்குப் போதும்" என்று பிரார்த்தனையை கொடுத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

செவ்வாய், 9 ஜூன், 2026

துளிகள் - 12 - ஆட்டிசம் குறைபாடும் ஆன்மீக பரிகாரமும்


மனிதர்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஏற்ப, அடுத்த பிறவியில் அவர்களுக்கான தண்டனை வியாதியாகவோ, உடல் குறைபாடுகளாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையிலோ இறைவனால் வழங்கப்படுகிறது.

ஆட்டிசம் (Autism) எனப்படும் குறைபாடு தற்போது பல குழந்தைகளைப் பாதித்து, அவர்களது பெற்றோருக்கு மனவேதனையை அளித்து வரும் சூழ்நிலை காணப்படுகிறது.

இதில் முக்கியமாக, இந்த குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்று பார்க்கும்போது, சில தவறுகளுக்கான தண்டனைகள் குறித்து தர்ம சாஸ்திரங்களில் குறிப்புகள் கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில ஆத்மாக்கள் செய்த தவறுகளை ஒரு குறிப்பிட்ட தண்டனையின் கீழ் வகைப்படுத்த முடியாத சூழ்நிலையில், பலவிதமான தவறுகளின் விளைவாக இத்தகைய நோய்கள் அல்லது குறைபாடுகள் இறைவனால் வழங்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

பூர்வ ஜென்மத்தில் செய்த தவறுகள் என்னவென்று புரியாத நிலையிலும், தாங்கள் எவ்வாறு வாழ்கிறோம் என்பதையும் முழுமையாக உணர முடியாத நிலையிலும், பெற்றோர்களுக்கும் இத்தகைய குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற விதி அமையும்போது, இவ்வாறான வாழ்க்கை அமைந்து விடுகிறது.

மருத்துவ ரீதியாக பல சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், ஆன்மீக ரீதியாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜ மூர்த்தி ஆகிய மூன்று தெய்வங்களையும் வீட்டில் வைத்து தினமும் வழிபட்டு வந்தால், இந்த ஆட்டிசம் குறைபாடுகள் மெதுவாக நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 5 ஜூன், 2026

துளிகள் - 11 - குருவை இகழும்போது சீடன் எப்படி நடக்க வேண்டும்?


மனத்தால் ஒருவரை குருவாக வரித்துக் கொண்டுவிட்டால், அவர் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும், அவரது வார்த்தைகள் ஒருவர் மனதுக்கு அமைதியை தந்தால், அவரது வழிநடத்தல் நிறைய நல்லதை, நல்ல விஷயங்களை வாழ்வில் அளித்தால், அவர் குரு ஸ்தானத்துக்கு உரியவர்.

சீடர், மனதுள் குருவுக்கான மரியாதையை பிரார்த்தனை வழி கொடுத்தாலும் போதும்.

அதே நேரத்தில், சீடத்துவத்தை சோதிக்கும் படி மூன்றாவது மனிதர் குருவை இகழ்ந்தால், ரௌத்ரம் உள்ளே பொங்கினாலும், கட்டுப்பாடுடன் அமைதியாக அங்கிருந்து, "சிவ சிவா" என்று கூறி செவி பொத்தி விலகி விட வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.

இந்த கட்டுப்பாடு எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. யாராகினும், குருவை குறை கூறுவதை கேட்கும் பொழுது, அப்படி ரௌத்திரம் பொங்கி வார்த்தைகளை சிதறவிட நேர்ந்தால், இறையை துணைக்கழைத்து, நாக்கின் நுனியிலிருந்து வாக்குகளை உதிர்க்கலாம்.

உதிர்த்த வாக்குகள் குறிப்பிட்ட காலத்தில் அதன்படியே அவர்கள் வாழ்க்கையில் நடந்தால், அது இறை செயல், நம் செயல் அல்ல என்று உணர வேண்டும்.

ஆனால், எந்த காரணம் கொண்டும் எதிரே பேசுபவர் உயிர் போகிற அளவுக்கான வார்த்தைகளை பேசக்கூடாது. அது பிரம்மஹத்தி தோஷத்தை கொண்டு தந்து விடும்.

ஆனால் ஒன்றை கவனிக்கவும். வாக்கை உதிர்த்துவிட்டால், அடுத்த நொடி முதல் விஸ்வாமித்ரர் நிலை தான் நமக்கு. நாம் அன்று வரை சேர்த்துக் கொண்ட தவசக்தியின் பெரும் பகுதியை இழந்துவிடுவோம்!

மறுபடியும் நிறைய தவம் செய்ய வேண்டும், பழைய நிலையை அடைய!

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வியாழன், 4 ஜூன், 2026

துளிகள் - 10 - வீட்டில் விளக்கு ஏற்றும் மற்றும் அணைக்கும் சரியான முறை


​தினமும் வீட்டில் இரண்டு நேரம் விளக்கேற்ற வேண்டும் — ஒன்று காலை, மற்றொன்று மாலை. விளக்கினை ஏற்ற தீக்குச்சியை உரசி அக்னியை உருவாக்கியதும், அனைத்து தெய்வங்களின் பார்வை படும் படி காட்டிவிட்டு, மனதுக்குள் "உங்கள் பார்வை பட்ட அக்னிதான் விளக்கில் ஜொலிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்துக்கொண்டு, 'ஓம்' என்று கூறி திரிக்கு அக்னியை தரவேண்டும். இவ்வாறு விளக்கினை ஏற்ற வேண்டும்.

​அதேபோல் விளக்கினை அணைக்கும் போது 'ஓம்' என்று கூறிகொண்டே திரியை எண்ணெய்க்குள் இழுத்து விட வேண்டும். கையால் அணைப்பதோ அல்லது ஊதி அணைப்பதோ கூடாது.

​வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்

துளிகள் - 9 - உடம்பின் அழுக்குகளை நீக்கி நோயின்றி வாழ அகத்தியர் & தேரையர் சித்தர் அருளிய மந்திரங்கள்

புதன், 3 ஜூன், 2026

துளிகள் - 8 - உடல் சூடு, சைனஸ், கண் பார்வை: அகத்தியர் காட்டிய ஆரோக்கிய வாழ்வியல் முறை!


பெரியவர்களும், குழந்தைகளும், நம் முன்னோர்கள் சொல்லி சென்ற, ஒரு சில நல்ல விஷயங்களை, அவரவர் வாழ்க்கையில் தினமும் நடைமுறைப்படுத்தி வந்தாலே, நல்ல பலன் கிடைக்கும்.

கண் பார்வை பாதிப்புக்கு காரணம், உடலுக்குள் மேல்நோக்கி செல்லும் அக்னி அல்லது சூடுதான். மேலும் குளிக்கும் பொழுது செய்கிற தவறுதான் முதன்மையான காரணம்! ஒரு சில பேர் தவிர அனைவரும் முதலில் தலையில் நீர் ஊற்றுவார்கள். அது தவறு. சாதம் கொதிக்கவைக்கிற பானையில் மேலாக கஞ்சியும் அரிசியும் கொதிப்பது போல் தலையில் அக்னி கொதித்துக் கொண்டிருக்கும். நீர் தலையில் விழுந்ததும் அந்த அக்னி அங்கிருந்து விரட்டப்பட்டு கீழ் நோக்கி அழுத்தப்படும், அது நம் உடலில் கண்ணில் உள்ள மிக மென்மையான லென்ஸசை தாக்கும். எந்த பக்கம் லென்ஸ் வளைகிறதோ அதற்கு ஏற்ப பார்வை சரி செய்ய கண்ணாடி போடுகிறார்கள். அப்படியானால் சரியான முறை என்ன? 

குளிக்க தொடங்கும் முன், குளிர்ந்த நீரை ஒரு கை நிறைய எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முதலில் காலில் நீர் ஊற்றி மேல் நோக்கி நீர் ஊற்றி வரவேண்டும். உடலுக்குள் இருக்கும் சூட்டை நீரானது மேல் நோக்கி விரட்டி வரும். தொண்டை பக்கம் நீர் வந்தவுடன் வாயிலிருக்கும் நீர் ஓடி வந்த அக்னியை உள் வாங்கி கொள்ளும். பின்னர் தலையில், முகத்தில் நீர் ஊற்றும் பொழுது மேலிருந்து அக்னி கீழ் இறங்கும், அதையும் வாயிலிருக்கும் நீர் உள்வாங்கும். கண்ணை தாக்க அக்னியே இருக்காது. கண் உள்ளிருந்து குளிர்ந்து விடும்.

மேலும் குழந்தைகள் உறங்கும் முன் அவர்கள் தலை உச்சியில், தொப்பிளில் சிறிது விளக்கெண்ணெய் தடவினால் இரவு முழுவதும் அவர்கள் தலைக்கு வரும் சூட்டை அது தணித்து விடும்.

வாரத்தில் ஒரு நாள் குழந்தைகளை உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இது சாத்தியம் இல்லை என்று சொன்னாலும், மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

உண்ணும் உணவில் காரத்தை தவிர்ப்பது அல்லது நிறையவே குறைத்துக் கொள்வது நல்லது. குடல் சூடாவதை தவிர்க்கலாம். குடல் சூடுதான் மேல் நோக்கி வேகமாக போகும். அக்னி வேகமாக குளிரும்பொழுது நீராக மாறி உடலில் பல இடங்களில் கட்டும், பின்னர் சளியாகும் அதுவே கன்னத்தில் தங்கி "சைனஸ்" என்றாகும். எப்போதும் சூட்டை ஆணிவேரில் அறுத்தால், பல வியாதிகளை தவிர்க்கலாம்! 

இவை அனைத்தும் பரீட்ச்சித்து பார்க்கப்பட்டு இங்கு கூறப்பட்டுள்ளது, மேலும் பல சித்தர்கள் வாழும் முறையில் சொல்லிப்போன விஷயங்கள் இவை.

அகத்தியப்பெருமானுக்குத்தான் நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!