செவ்வாய், 28 ஜூலை, 2026

துளிகள் - 36 - தர்மத்தில் தியாகம், வாழ்வில் சத்தியம் — அதுவே இறைவன் விரும்பும் பாதை!


கோடி, கோடியாக அள்ளிக்கொடுத்த தர்மனை விட, பல நாள் பட்டினியாகக் கிடந்த அந்த அந்தணன், தன் பசி, தன் குடும்பப் பசி அனைத்தையும் மறந்து, வந்திருந்த முனிவருக்குத் தந்த அன்னமே உயர் அன்னமாகி, அதுவே உயர் தர்மமாகிவிட்டது. தர்மம் என்பது அளவைப் பொறுத்ததல்ல. சத்தியம் என்பது சூழ்நிலையைப் பொறுத்ததல்ல. விளைவு, இருக்கும் சூழல் — இவற்றைப் பொறுத்ததே.

இருப்பதில் கொடுப்பது சிறப்பு என்றால், இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.

உயர்ந்த கருத்துக்களைக் கேட்பதும், மனதில் பதிய வைப்பதும், சத்சங்கம் நடத்துவதும் மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றவும் முயல வேண்டும்.

"இதெல்லாம் யாரால் இயலும்? கலிகாலத்தில் இதெல்லாம் சாத்தியமா? உயர்ந்த பழக்கவழக்கங்கள் கேட்பதற்கும், ஓதுவதற்கும், விவாதம் செய்வதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பின்பற்றக் கடினமாக உள்ளது" என்று ஒருவன் கூறினால், நல்லவனாக, உயர்வானவனாக வாழ்வது எளிது என்றால், அனைவரும் அவ்வாறு வாழ்ந்துவிட்டு போவார்களே? அது கடினம் என்பதால்தான் அதற்குரிய மரியாதையும் அதிகமாக இருக்கிறது.

ஏன்?

செல்வம் திரட்டுவதைவிட கடினம் இந்தக் காலத்தில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது.

ஆக, "இதனால் நான் இந்தத் தவறை செய்தேன். இந்த சூழ்நிலையால் நான் அடிபணிந்து போக வேண்டியிருந்தது" என்று எந்தக் காரணமும் கூறாமல், ஒரு மனிதன் சத்தியவானாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் செல்லத் தொடங்கிவிட்டால், இறைவன் அவனை நோக்கி வருவான் என்பது உறுதி.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

திங்கள், 27 ஜூலை, 2026

துளிகள் - 35 - பரிபூரண சரணாகதியே துன்பங்களிலிருந்து மீளும் வழி!


எமை நாடிய ஆத்மா பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக இந்தப் பிறவியிலே இப்படியொரு சிக்கலில் இருக்கிறது. இந்த ஆத்மாவை மன்னித்து இந்த ஆத்மாவிற்கு நல்லதொரு வழியைக் காட்டவேண்டும் என்றுதான் யாமும் பிரார்த்தனை செய்து அந்த இறைவனிடம் முழு சரணாகதி செலுத்தி, அந்த பரந்த பரம்பொருள் எதை உணர்த்துகிறதோ அதை எமை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்துகிறோம். ஆயினும் கூட ஒரு துன்பம் வந்த உடனேயே சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் அந்த துன்பம் போய்விடாதா ? என்ற ஏக்கம்தான் மனிதனிடம் இருக்கிறது. கடுமையான பாவவினைகளின் காரணமாகத்தான் ஒரு மனிதனுக்கு கடும் வியாதியும், கடுமையான தன சிக்கலும், ருணமாகிய கடனும், கடும் பொருளாதார நெருக்கடியும், உறவு சார்ந்த சிக்கல்களும் இன்னும் பிற துன்பங்களும் வருகிறது. எனவே ஒரு மனிதன் தன் வாழ்வியல் முயற்சிகளோடு பரிபூரண சரணாகதி பக்தியையும் வளர்த்துக்கொண்டால் கட்டாயம் மெல்ல, மெல்ல அவனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம். 

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 24 ஜூலை, 2026

துளிகள் - 34 - குருவை வெளியில் தேடாதே உள்ளே தேடு!


மனித உருவில் குரு வேண்டுமென்று பல மனிதர்கள் நாடுகிறார்கள். நன்றாக புரிந்து கொண்டிட வேண்டும். மனித வடிவிலே சிறந்த குருமார்கள் இல்லாமலில்லை. ஆனால் அதை ஒரு மனிதன் தன்னுடைய முன்ஜென்ம பாவங்களை குறைத்து, அதனையும் தாண்டி ஆன்மீக தாகம் எடுத்து, அதை நோக்கிய சிந்தனையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத நிலையில் இறைவனாகப் பார்த்துதான் தக்க குருவை அனுப்பி வைப்பார். எனவே மனித வடிவில் குருவைத் தேடி காலத்தை விரயம் ஆக்கிட வேண்டாம். சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கும். அதைக் கற்றுக் கொண்டு தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக அமைதியாக முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து அமைதியாக, மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து எஃது நடந்தாலும், சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும், சிந்தனை எங்கு அலைந்து, திரிந்து, திளைத்து சென்றாலும், எத்தனை குழப்பம் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்கப் பழக வேண்டும். ஒரு சிந்தனை தவறு என்றால் அந்த சிந்தனை இன்னொரு மனிதனிடம் அதிலும் ஆன்மீக வழியில் வரும் மனிதனிடம் இருந்தால் இவன் ஏற்றுக்கொள்வானா ? என்று பார்த்து, இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால், பிறரிடம் இந்த சிந்தனையிருந்தால் அவனை மதிக்க மாட்டோம் என்றால் நம்மிடம் மட்டும் ஏன் இந்த சிந்தனை ? என்று ஆராய்ந்து பார்த்து, இவனை இவனாகவே பகுத்துப் பார்த்து, இவனை இவன் சரி செய்து கொண்டால் மெல்ல, மெல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 19 ஜூலை, 2026

துளிகள் - 33 - ஏன் இந்த பிறவியில் கஷ்டம்? - கர்ம வினையும் இறை நீதியும்!


எல்லாப் பிறவிகளிலும் ஆத்மா ஒன்றாக இருந்தாலும் ஏதோ ஒரு பிறவியில் உடல் செய்த பாவத்தின் பலன்களை இப்பிறவி உடல் ஏன் அனுபவிக்க வேண்டும் ? ஏனென்றால் இப்பிறவியில் வாய்த்த உடல் எந்த பாவங்களும் செய்யவில்லையே ?

நீ கேட்கின்ற கேள்வியை சுருக்கமாக நான் கேட்கிறேன். எந்த மன நிலையில், எந்த உணர்வில் ஒரு மனிதன் தவறு செய்கிறானோ அந்த உணர்வு இருக்கும்பொழுதே அவனுக்கு தண்டனையை கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லை. தான் யார் ? என்ன குற்றம் செய்தோம்? என்று தெரியாமலேயே ஒருவன் தண்டனை அனுபவிக்கிறானே, இது நியாயமா ? என்று கேட்கிறாய். இதுதானப்பா உச்சகட்ட தண்டனையே. ஒருவன் ஆரோக்கியமாக, சொத்து சுகத்தோடு இருக்கிறான். நல்ல பதவியில் இருக்கிறான். அப்படி அவன் இருப்பதற்கு காரணம் இறைவன் அவனுக்கு தந்திருக்கிறார். அப்பொழுது அவன் என்ன செய்ய வேண்டும் ? மேலும், மேலும் நற்பணிகளை செய்ய வேண்டும். யாராவது செய்கிறார்களா ? எத்தனை மகாராஜாக்கள் எத்தனை அட்டூழியங்களை செய்தார்கள் ? எத்தனை ஜமீன்தார்கள் எத்தனை தீய காரியங்களை செய்தார்கள் ? இப்படியெல்லாம் செய்துவிட்டு, அந்தப் பிறவியின் புண்ணியத்தை, ஓட்டை பாத்திரத்தில் நீரை வழிய விடுவதுபோல விட்டுவிடுகிறான். புண்ணியத்தால் பெற்ற செல்வத்தையும், பதவியையும் மேலும் நன்மைக்கு பயன்படுத்தாமல், ஒரு சிலர் தவிர, மற்ற அனைவருமே தவறுகளுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள். என்னென்ன அட்டூழியங்கள் எல்லாம் இந்த மனிதன் செய்கிறான் தெரியுமா ? சற்று பணமும், பதவியும் வந்துவிட்டால், சொல்வதை கேட்பதற்கு சில எடுபிடிகள் கிடைத்துவிட்டால் போதும், இவன் செய்வதெல்லாம் அட்டூழியம்தான், அயோக்கியத்தனம்தான் , பாவங்கள்தான். சொத்துக்காக பிறரை துடிக்க, துடிக்க வதைத்து கொல்வான். காண்கின்ற பெண்களையெல்லாம் மஞ்சத்திற்கு அழைப்பான். இப்படியெல்லாம் செய்து புண்ணியம் தீருகின்ற சமயத்திலே அவனுக்கு அகவை முதிர்ந்துவிடும். பால்ய காலத்தில் செய்த பாவங்கள் அவன் உடலையும், உள்ளத்தையும் தாக்கும். அப்பொழுதுதான் அவனுக்கு ஞானம் வரும். துன்பம் வரும்பொழுதுதானே ஞானம் பிறக்கிறது. ‘ இறைவா ! தெரியாமல் செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடு, எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடு “ என்று கெஞ்சுவான், கதறுவான். அதன் பிறகு அவன் திருந்தினாலும் வாழ்வதற்கு அவன் ஆன்மா இருக்கும், உடல் இருக்காது . என்ன செய்வது ? மீண்டும் ஒரு பிறவி எடுக்கிறான். புதிய உடல் தரப்படுகிறது. பழைய நிகழ்வுகள் எல்லாம் மறைபொருளாக மறைக்கப்படுகிறது. அவன் என்ன வேண்டினான் ? செய்த பாவங்கள் எல்லாம் தீரவேண்டும் என்று. பாவங்களை தீர்ப்பதற்காகத்தான் அவனுக்கு கஷ்டங்கள் கொடுக்கப்பட்டு, கொடுக்கப்பட்டு, எந்தெந்த வழிகளில் பாவங்கள் செய்தானோ அந்தந்த வழிகளில் அவைகளையெல்லாம் நீக்கி அவனை சுத்தி படுத்தும் வேலை துவங்குகிறது. இந்த சுத்தி படுத்தும் வேலை ஒரு பிறவியில் துவங்கி ஓராயிரம் பிறவிகள் வரை தொடரும். ஒரு பிறவியிலேயே நிறைவாகும். அது, அந்தந்த ஆன்மாக்களின் மனோதிடத்தை பொறுத்தது, மனோ பலத்தை பொறுத்தது.
இறை இந்த நீதியை காரண, காரியமில்லாமல் வைக்கவில்லை. அது மட்டுமல்ல, நீ எண்ணுவதுபோல் அந்தந்த பிறவியில் செய்த தவறுகளுக்கு அந்தந்த பிறவியிலேயே தண்டனை இல்லை என்று மட்டும் சொல்லாதே. அந்தந்த பிறவியிலும் தண்டனை உண்டு. ஆனால் யாருக்கு தண்டனை வரும் தெரியுமா ? சிறிதளவு பாவங்கள், அதிகளவு புண்ணியம் வைத்திருக்கும் ஆத்மாக்கள் சற்று தவறு செய்தாலும் போதும், உடனேயே இறை குறுக்கிட்டு “ ஆஹா ! என் பையன், என் சேயவன் தவறான வழியில் செல்கிறானே “ என்று உடனடியாக தண்டித்து, கட்டி, இழுத்து விடுவார். ஆனால் பெருமளவு பாவச்சேற்றிலே அமிழ்ந்திருக்கும் மனிதனை ‘ இவனை விட்டுத்தான் பிடிக்க வேண்டும் . இவன் என்னை உணர்வதற்கு இன்னும் பல பிறவிகள் இருக்கிறது ‘ என்பதால் இவனை இவன் போக்கிலேயே விட்டு, அவன் உணரும் பிறவி வரும்பொழுது இறை எம்போன்ற மகான்களை அனுப்பி அவனுக்கு நல்லவைகளை எடுத்துரைத்து அவனை தன் பக்கம் இழுத்துக் கொள்ளும்.
எனவே எந்த பிறவியில், எந்த உணர்வில் ஒரு மனிதன் தவறு செய்தாலும் அந்த உணர்விற்கு அவன் வந்துவிடுவான் அந்த தண்டனை கிடைக்கும்பொழுது. அது அவனவன் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.

அப்பனே ! ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் பேறு, அது நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, இன்பம், துன்பம் எல்லாவற்றையும் இறை தீர்மானிப்பதில்லை. அந்தந்த உயிர்தான் தீர்மானித்துக் கொள்கிறது. அந்த உயிர் அறியாமையால் சில விருப்பங்களை மனதில் வளர்த்துக் கொள்கிறது. அந்த விருப்பங்கள் நிறைவேறும் வரை அதற்கு அமைதி கிடைப்பதில்லை. எனவேதான் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு வருமாறு இறைவன் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார். ஏனென்றால் அணிந்திதை, கமலினி கதை தெரியுமா உனக்கு ? கயிலையிலே சுந்தரர் இருந்தபொழுது, ஒரு கணம் கூட இல்லை, அம்பிகையின் தோழிமார்கள் அழகாக இருக்கிறார்களே ? என்றுதான் நினைத்தார். அப்படி நினைத்த உடனே “ பூமிக்கு செல், அதை முடித்துவிட்டு வா. அதற்கான இடம் இதுவல்ல.இது காமனை எரித்த இடம் . இங்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அதற்குரிய இடம் பூமி “ என்று அனுப்பி விடுகிறார் இறைவன்.
அப்படித்தான், கர்ணனின் மனோ நிலை வேறு, மஹாபலியின் மன நிலை என்பது வேறு. எந்தவொரு அசுரனும் நன்மை மட்டுமல்ல, தீமையும் கலந்துதான் செய்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மஹாபலி பெற்ற பேறு, வேறு யார் பெற முடியும் ? கர்ணன் காட்சியைதானே கண்டான். மஹாபலி திருவடி தீக்ஷையை அல்லவா பெற்றிருக்கிறான்? மஹாபலியின் பிள்ளை செய்யாத அட்டூழியம் இல்லை. இருந்தாலும்கூட அவனும் திருவடியால் தீண்டப்பட்டு வானத்திலே நிரந்தரமாக இருக்கும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறான். எனவே அவரவர்கள் விருப்பத்தை, ஆசையை அந்தந்த காலகட்டங்கள் வரும்பொழுது இறை நிறைவேற்றி விடுகிறது.
 
 திருக்கடையூரில் எமனை எட்டி உதைத்ததாகத்தானே வரலாறு ? எமன் அதற்காக எத்தனை காலங்கள் *தவம்* செய்தார் என்று யாருக்காவது தெரியுமா? முக்கண்ணனின் திருவடியால் தீண்டப்பட வேண்டும், உதை வாங்க வேண்டும், அந்த பெரும்பேறு எனக்கு வேண்டும் இறைவா ! என்று பல்லூழி ஆண்டு காலம் செய்த தவத்தின் பயன்தான் திருவடி தீக்ஷையானது அவருக்கு அங்கே மார்கண்டேயர் மூலம் கிடைத்தது. எனவே இறையின் செயல்களை வெளிப்படையாக பார்த்தால் ஒன்று நன்மை போல் தோன்றும். ஒன்று தீமை போல் தோன்றும். ஆனால் அதன் முடிவு அந்தந்த ஆத்மாவிற்கு நன்மையாகத்தான் முடியும். எனவே இரண்டுமே அந்தந்த ஆத்மாக்களின் ஆசைதான், தாகம்தான். அதை அந்தந்த கால கட்டத்திலே எப்படி நிறைவேற்ற வேண்டுமோ, இறை அப்படி நிறைவேற்றி விடுகிறார்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 32 - கலியுக கடவாளான முருகப் பெருமான் அருள் பெற யாது செய்தல் வேண்டும்?


நலம் உண்டாகும். நமசிவாயம். நன்னெறியான வாழ்வின் பயணத்தில் பல பிறவிகள் புண்ணிய செயல்கள் செய்து இறைவனின் திருவுள சம்மதம் படி உலகோர்க்கு தொண்டு செய்து உள்ளொளி விளங்கும் பாக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே.. அம்பிகை அருளால் ஆறுமுகத்தின் அருள் வாய்க்கப் பெறும். பேரியக்கத்தின் அருளாணை இருத்தலும், அவசியம் ஆகிறது.. பரம் பொருளின் வடிவான சிவம் வேறு அல்ல அங்கிருந்து வெளிப்பட்ட ஆறுமுகம் வேறு அல்ல என்ற தெளிவும் வேண்டும்.. கருணாமூர்த்தி ஆக மனம் விளங்குவதும், மெய்யை காப்பதும், இன்ப துன்ப நிலைகளிலும் மனம் சமநிலையில் இருத்தலும், மெளன மொழியில் அகத்தில் அனுபூதியை பெறுதலும் உணர்வின் கண் கொண்டு வைரம் போன்ற நெஞ்சுருதி வாழ்தலும், பிறவிப்பிணி அகற்றி அகத்தே ஆறுமுக சிவத்தை அருள செய்யும். உண்பதும், உறங்குவதும், பொருள் தேடுவதும் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து வேலவனை வணங்குவதை வேலையாக கொண்டு அவன் தன் பணியை உணர்ந்து செய்து வந்தாலே போதும் அப்பனே!! உள்ளும் புறமும் சிவமாக நல் ஆசிகள்!

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

துளிகள் - 31 - பணிந்த மனமே பரிபூரண இறையருளைப் பெறும்!


தளராத பக்தி, தடைபடாத தர்மம், தவறாத தர்மம் என்றென்றும், என்ற வழியிலே மாந்தர்கள் செல்லச் செல்ல, இறைவனின் பரிபூரண அருளும் தொடருமப்பா. அப்பனே! இகுதொப்ப நலம் எண்ணி, நலம் உரைத்து, நலமே செய்ய, என்றும் நலமே நடக்கும், என்று யாம் காலாகாலம் கூறிக்கொண்டே இருக்கிறோம். ஆயினும், மனிதனின் மனதிலே உறுதியின்மையும், தெளிவு இல்லாததாலும், லோகாயதம், அழுத்தம், திருத்தமாக பிடித்துக் கொண்டிருப்பதாலும், உடனடியாக ஆதாயத்தை எப்பொழுதுமே மனிதமனம் எதிர்பார்ப்பதாலும்தான், அனைத்து குறுக்கு வழிகளையும் மனிதன் கையாளுகிறான். நீக்கமற நிறைந்துள்ள இறைவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கிற ஒரு உணர்வு உண்மையாகவே, ஒரு மனிதனுக்கு அழுத்தம் திருத்தமாக இருக்குமேயானால், அவன் "யாரும் பார்க்கவில்லை" யாருக்கும் தெரியவில்லை, நான் இடர் படுகிறேன், எனவே இந்த தவறை செய்யலாம், என்னை விட அதிக தவறு செய்யக்கூடிய மனிதன் நன்றாகத்தானே இருக்கிறான். எனவே, நான் தவறு செய்யலாம். அது தவறில்லை, என்ற வாத பிரதிவாதங்களை தமக்குள் வைத்துக் கொண்டு, தவறான வழியில் சென்று கொண்டே இருக்கிறான். 

ஆயினும் கூட, இறைவன் பார்க்கிறார், பார்க்கவில்லை, மற்றவர்கள் அறிகிறார்கள், அறியவில்லை, அவனவன் மனமே சாட்சியாக வைத்து, ஒரு மனிதன் நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தாலே, அம்மனிதனுக்கு இறை வழிபாடுகூட தேவையில்லை எனலாம். நன்றான இறைவழிபாட்டையும் நன்றான பாசுரங்களையும் ஓதுவதோடு ஒரு மனிதன் நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி, அப்பழுக்கற்ற மனிதனாக, எல்லோருக்கும் நலத்தை செய்யும் புனிதனாக, போராடியாவது வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இகுதொப்ப நல்ல வழியைத் தொடர்ந்து கடைபிடித்தாலே இறைவன் அருள் பரிபூரணமாகத் தொடரும். இல்லையென்றால், வெறும் சடங்குகளை மட்டும் செய்துகொண்டே இருக்கக்கூடிய, ஒரு சராசரி மனித நிலைதான் அங்கு நிற்கும். எனவே, இறைவனை வணங்கவும், தர்மங்களை செய்யவும், சத்தியத்தை பேசவும் மட்டுமல்லாது, அடிப்படை மனித நேயத்தை மறந்து விடாமல் வார்த்தைகளில் பணிவு, செயல்களில் பணிவு, தேகத்தில் பணிவு, பார்வையில் பணிவு, என்று ஐம்புலனும் ஆதாரமாக இருக்கும் மனம் பணிய, மனதோடு இருக்கும் ஆத்மா பணிய, இப்படி பணிதலே இறைவனருளை பரிபூரணமாகப் பெற்றுத்தரக்கூடிய நல்லதொரு உயர் நிலையாகும். எனவே, பணிதல் என்பது இறங்குதல் அல்லது தாழ்ந்து போதல் என்ற பொருள் அல்ல. வேடிக்கையாகக் கூறப்போனால் நிறை காட்டும் நிறை காட்டுமனி துலாக்கோல், அதை கவனித்தால் தெரியும். எங்கே அதிக கன பரிமாணம் இருக்கிறதோ, அந்தத் தளம் தாழ்ந்தே இருக்கும். கன பரிமாணம் இல்லாத அடுத்த தளம் உயர்ந்தே இருக்கும். இப்பொழுது அது உயர்ந்து இருப்பதால், மெய்யாக அது உயர்ந்ததா? இன்னொரு தளம் தாழ்ந்து இருப்பதால், மெய்யாகவே அது தாழ்ந்ததா? எனவே முற்றிய பயிர் தலை கவிழ்ந்தே இருக்கும். ஆங்கே நிறை குடம் தளும்பாது இருக்கும். இவற்றையெல்லாம் மனிதர்கள், குறிப்பாக எமது வழியில் வரக்கூடியவர்கள் புரிந்து கொண்டு வாழ இறைவன் அருளும் தொடர்ந்து கொண்டே வருமப்பா!

வாக்குரைத்தவர் :அகத்தியப்பெருமான்!

சனி, 18 ஜூலை, 2026

துளிகள் - 30 - உணர்ந்து திருந்துவதே இறைவனின் விருப்பம்!


ஒவ்வொரு ஆன்மாவும் பிறவியெடுத்ததின் நோக்கம், பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும், புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும்கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள் தோறும் இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும், துயரமும், மனவேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவதுபோல தவறு செய்யும்பொழுதே ஒரு மனிதனை தடுத்துவிடலாமே ? தண்டித்து விடலாமே ? என்ற பார்வையிலே பார்த்தால், இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன் ? அதைவிட படைக்கும்பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும். நல்லதையே எண்ணவேண்டும், நல்லதையே உரைக்கவேண்டும் நல்லதையே செய்யவேண்டும் என்று இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே? ஆனால் அவ்வாறு இல்லாமல் இஃதொப்ப நிலையிலே மனிதர்களுக்கு எல்லாவகையான சுதந்திரங்களையும் தந்து, அவனை, பல்வேறு தருணங்களில் அவன் போக்கிலேவிட்டு ‘ இஃது நல்லது, இஃது தீயது, இஃது தக்கது, இஃது தகாதது ‘ என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து, இயல்பாக ஒருவன் நல்லவனாக மாறவேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன் அதாவது தான் கண்காணிக்கப்படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ, அச்சத்தினாலோ அல்லது வேறு எஃதாவது உபாதை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 29 - தடைகள் வந்தாலும் தர்மத்தை விடாதே!


கொடுத்துக்கொண்டேயிரு. காற்று எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் வீசுகிறதோ, சூரிய ஒளி எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் படுகிறதோ, மழை எவ்வாறு நல்லவன், தீயவன் என்று பாராது பொழிகிறதோ அதைப்போல பொதுவாக செவியில் பிறர் குறை விழுந்த உடனோ அல்லது தெரிந்த உடனோ உன்னால் முடிந்தவரை முயற்சி செய்து தீர்த்துக்கொண்டேயிரு. 

இதில் எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை ஏளனங்கள் வந்தாலும் அதையெல்லாம் அமைதியாக ஏற்றுக்கொண்டேயிரு. ஏனென்றால் ஒருவகையில் தர்மம் செய்வது எளிது. இன்னொரு வகையில் கடினம். எப்பொழுது கடினம் ? தர்மம் செய்ய, செய்ய, இறைவன் சில சோதனைகளை வைப்பார். அதையெல்லாம் தாண்டி இந்த ஆத்மா வருகிறதா ? என்று பார்ப்பார். உடன் இருப்பவர்களை வைத்தே எதிர்ப்பு காட்ட வைப்பார். ‘ இப்படி கொடுத்துக்கொண்டே போனால் நாளை உனக்கு ஒரு தேவை என்றால் என்ன செய்வாய் ? என்பதுபோன்ற அச்சமூட்டும் வினாக்களையெல்லாம் பிறரை கேட்க வைப்பார். இதுபோன்ற தருணங்களிலெல்லாம் மனம் தடுமாறாமல், சோர்வடையாமல் தொடர்ந்து நல்ல வழியில் சென்றுகொண்டே இருக்கவேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 28 - விரும்பியதை விலக்கும்போதுதான் ஆன்மப் பயணம் தொடங்குகிறது!


நல்ல கர்மாக்களின் எதிரொலியால் விளைகின்ற நல்ல விஷயங்களை மனிதன் அனுபவித்து போகட்டும் என்று இறைவன் உத்தரவிட்டாலும், அவன், அதிலேயே ஒட்டி நின்று ஆன்ம வழியை காணாமல், இகபர விஷயங்களுடன் ஒட்டிக்கொண்டு விடுகிறான். ஆகவே, சிறப்பாக இருந்தவனைக் கூட சில நேரங்களில் யாங்கள் கீழே இறக்க வேண்டி உள்ளது. மனம் பக்குவம் அடைவது என்பது அத்தனை எளிதல்ல. மனிதன் எப்பொழுது, மிக விரும்பி அடைந்த விஷயத்தை கூட வேண்டாம் என விலக்கி வைக்க தொடங்குகிறானோ, அந்த நொடி முதல் எங்கள் பாதையில் நடக்க தொடங்கிவிட்டான் என்று பொருள்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 27 - பிறருக்காகப் பிரார்த்திப்பவன், இறையருளின் பாதையை அடைவான்!


நாடி மீது நம்பிக்கை வந்து, தர்மத்தின் மீது நாட்டம் வந்து சத்தியத்திலும் பிடிப்பு வந்தால், இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் ஜீவ அருள் ஓலை மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும் என்று யாம் எண்ணினாலும், எம்மைப் பொருத்தவரை ஒருவன் தீய வழியில் சென்றாலும், நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல் வழிப்படுத்த வேண்டியது எமது கடமை என்றாலும் இறைவன் அனுமதித்தால் நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிரார்த்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மனிதர்களுக்கு புண்ணியம் சேர்த்துக்கொள்ள எத்தனையோ வழிகளை இறைவன் அளித்துள்ளான். அதில் ஒன்று பிறருக்கான பிரார்த்தனை. முகம் பாராமல் பிறர் துன்பங்களுக்கு பிரார்த்திப்பவன், விரைவில் எங்கள் அருகில் வருவான். யாமும் வழிநடத்துவோம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 17 ஜூலை, 2026

துளிகள் - 26 - இறைவனுக்கு பிடித்தபடி வாழ்ந்தால், சித்தர்களே உங்களைத் தேடி வருவார்கள்!


ஒருவனுக்கு ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றால், அவனுக்கு, சித்தர்கள் மீதும், இறைவன் மீதும் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவனுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு வழியாக உள்புகுந்து செய்தியை அவனுக்கு தெரிவித்து விடுவோம். அதற்கு, ஓலைச்சுவடியோ, நேரில் தோன்றவேண்டும் என்பதோ தேவை இல்லை!

எனவே, ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தால், இறைவனுக்கு பிடிக்குமோ, அதை கண்டுபிடித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், எங்கள் தரிசனமும், அருகாமையும் இயல்பாக கிடைக்கும். அனைத்தும் ஒரு மனிதன் நடந்து கொள்வதில்தான் உள்ளது.

வாக்குரைத்தவர் அகத்தியப்பெருமான்!

துளிகள் - 25 - நல்லதைச் செய்யும்போது மனக்குழப்பம் வந்தால், பாவம் இன்னும் குறையவில்லை என்று பொருள்!


யார் என்ன கூறினாலும் மனக்குழப்பம் அடையாமல் நாங்கள் முன்பே கூறியது போல், தவறை செய்கின்ற மனிதன் தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து, பாவத்திற்கு மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் யார் சொன்னாலும் கேட்கிறானா ? யார் சொன்னாலும் தன்னை மாற்றிக்கொள்கிறானா ? தவறு செய்கின்ற மனிதனுக்கு இருக்கின்ற உறுதி ஏனடா நல்லது செய்கின்ற மனிதனுக்கு இல்லாமல் போகிறது ? ஏன் தடுமாற்றம் வருகிறது ? ஏன் குழப்பம் வருகிறது ? அங்கு இப்படி கூறுகிறார்கள், இங்கு இப்படி கூறுகிறார்கள், இதை இப்படி நம்பவேண்டும், அதை அப்படி நம்பவேண்டும், இங்கு கூறுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை என்றெல்லாம் ஏன் குழப்பம் வருகிறது ? குழப்பம் வருகிறது என்றாலே பாவங்கள் இன்னும் இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே தொடர்ந்து அறவழியில். சத்யவழியில் அனைவரும் வர நல்லாசிகள்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

துளிகள் - 24 - விதியை மாற்ற மகான்கள் போராடியும் மனிதன் ஏன் மாறுவதில்லை?


இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப மனிதர்களின் உலக வாழ்வு எக்காலத்திலும் என்றென்றும் விதிவசம்தான் என்பது எம்போன்ற மகான்கள் அறிந்த ஒன்றுதான். இவைகளைத் தாண்டி மனிதர்களை ஓரளவு மெல்ல, மெல்ல மேலேற்ற, கடைத்தேற்ற, கரையேற்ற இறைவழி, அறவழி அழைத்து செல்லவே மகான்கள் காலகாலம் போராடுகிறார்கள். ஆயினும்கூட யாம் அடிக்கடி இயம்புவது போல பெரும்பாலான பொழுதுகளில் விதிதான் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது. இஃதொப்ப சராசரியாகவே வாழ்ந்து உண்டு, உறங்கி எஃதும் தெரியாமல் வெறும் புலன் கவர்ச்சிக்கு மயங்கி வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகளைத் தாண்டி இறை என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகின்ற கூட்டம் ஒருபுறம். இந்த இரண்டையும் தாண்டி ஒரு குருவை நாடுவோம். குருவை தொட்டு, தொட்டு மேலேறுவோம் என்று வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஓலைகளிலே சித்தர்கள் வாக்கு உரைக்கிறார்கள். அதனைக் கேட்டு வாழ்க்கையின் துன்பங்களை நீக்கிக்கொள்வோம். அஃதோடு உண்மையான ஞானவாழ்வையும் அறிந்துகொள்வோம் என்று இருக்கின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும்விட இதில் எந்த நிலையில் ஒரு மனிதன் நின்றாலும் அவன் மதியில் விதி அமர்ந்துகொண்டு ஆட்டுவிக்கிறது என்பது உண்மை.

அந்த விதியை மாற்றத்தான் யாங்களும் எங்கள் நிலையிலிருந்து மிக,மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில் பல்வேறுவிதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே ஏறத்தாழ 9 ஆண்டுகாலம் எந்தவிதமான ( பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா என்ற ) கணக்கினையும் பார்க்காமல், இன்னும் கூறப்போனால் புண்ணியம் அதிகம் செய்த, செய்கின்ற ஆத்மாக்களைவிட பாவங்களை அதிகம் சுமந்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களுக்கும் சேர்த்து வாக்குகளை விதவிதமாக உரைத்திருக்கிறோம். ஆயினும்கூட எப்படி ஒரு செவிடன் செவியிலே எதைக்கூறினாலும் ஒன்றும் நுழையாதோ அதைப்போலதான் நடந்துகொண்டிருக்கிறது. இயல்பாக சாத்வீகமாக எதையும் நல்லவிதமாக பார்க்கக்கூடிய தன்முனைப்பு குறைந்த ஆத்மாக்களை கரையேற்றுவது என்பது எளிது. அதாவது ஏற்கனவே நன்றாக படிக்கக்கூடிய மாணாக்கனை மேலும் நன்றாக படிக்கவைப்பது போல. ஆனால் சற்றும் கல்வி ஏறாமல் திணறிக்கொண்டு இருக்கக்கூடிய, கல்வி என்றாலே வெறுக்கக்கூடிய ஒரு மாணவனை மேலேற்றுவதுதான் ஆசிரியருக்கு சவாலாக இருக்கும். அந்த வழிமுறையையும் நாங்கள் கையாண்டு இங்கு வருகின்ற பலருக்கு தராதரம் பார்க்காமல் நாங்கள் வாக்கைக் கூறியது உண்டு. ஆயினும்கூட வழக்கம்போல் விதி வென்று அவர்கள் (விதிப்படி) வாழத்தான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. இறைவன் தந்த அறிவை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தாத மனிதன் எந்த இடத்தில் பயன்படுத்தக்கூடாதோ அந்த இடத்தில் பயன்படுத்துகிறான். சதாசர்வகாலம் மிருகவெறி கொண்டு அலைவதும், தன்முனைப்பும், ஆணவமும் கொண்டு அலைவதும், நல்ல புண்ணியம் செய்கின்ற ஆத்மாக்கள் மனம் நோக நடந்துகொள்வதும்தான் இங்கு வருகின்ற பெரும்பாலான ஆத்மாக்களின் இயல்பாக இருக்கிறது. கடும் சினமும், ஆணவமும் கட்டாயம் உலக வாழ்க்கையை மட்டுமல்ல மேலுலக வாழ்க்கையைக்கூட தராது தடுத்துவிடும் என்பதை உணரவில்லை. உணர்ந்தாலும் அதை பெரிதாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

எல்லாம் விதிதான் என்றால் மதிக்கு என்ன வேலை இருக்கிறது ? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான் விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய்விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட மனித வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எஃதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம்தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான் இருந்தாலும் அதனையும் நாங்கள் செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே ? அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே ? என்றுதான். ஆனாலும் வழக்கம்போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வியாழன், 16 ஜூலை, 2026

துளிகள் - 23 - மனிதன் தர்மத்திற்கு கணக்கிட்டால், விதி கணக்குத் தீர்க்கும்!


தான தர்மத்தின் இன்னொரு முகம்!

இறைவன் அருளாலே யாம் உணர்த்துவதை விட விதி நன்றாக உணர்த்திவிடும் அப்பா. இரந்து கேட்கும்பொழுது தராத மனிதனுக்கு இறைவன் கள்வனை படைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தன்னை சுற்றி நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளிலே துன்பப்படும், துயரப்படும் மனிதனைப் பார்த்து அங்கே நல்ல குணத்தை பயன்படுத்த வேண்டும். அங்கே அறிவை பயன்படுத்தக்கூடாது. ‘இவன் உதவி கேட்கிறான். இவனுக்கென்ன ? . தேகம் ஆரோக்யமாகத்தானே இருக்கிறது. இவன் கையேந்துவது தகாதது. இவனுக்கு எதற்கு தரவேண்டும் ? ‘ என்று இவனாகவே ஒரு முடிவிற்கு வருகிறான். அடுத்தவனை பார்க்கிறான் ‘ இவனுக்கென்ன ? இவன் குடும்பத்தில் இவனுக்கு போதிய ஊதியம் இல்லையென்றாலும் உடன் பிறந்தவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் ? அவர்கள் செய்யட்டுமே ? அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு ? நாம் ஏன் இதிலே ஈடுபடவேண்டும் ? ‘ அடுத்து இன்னொருவனை பார்க்கிறான். ‘ இவனுக்கென்ன ? நன்றாகத்தானே இருக்கிறான். இவன் முட்டாள்தனமாக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்துவிட்டால் அதற்கு நானா பொறுப்பு ? நான் எதற்கு அதிலே தலையிடவேண்டும் ? ‘ என்றெல்லாம் மனிதன் தன் கைப்பொருளை இழப்பதற்கு முன்னால் மிக தந்திரமாக சிந்தனை செய்வதில் சாமர்த்தியத்தைக் காட்டுகிறான். பிறகு விதியும் தன் சாமர்த்தியத்தைதான் காட்டுமப்பா. எனவே அப்படியெல்லாம் அள்ளி, அள்ளி தருகின்ற மனிதர்களையே விதி விடுவதில்லை எனும் பொழுது மற்றவர்களின் நிலையை எண்ணிக்கூட பார்க்கத் தேவையில்லை.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

திங்கள், 13 ஜூலை, 2026

துளிகள் - 22 - துன்பம் தொடர்ந்தால் எங்கே தவறு இருக்கிறது என்பதை ஆராயுங்கள்!


நான் சரியாகத்தான் இருக்கிறேன். நான் நேர்மையாகத்தான் நடக்கிறேன். நான் ஒழுங்காகத்தான் எல்லாவகையிலும் வாழ்கிறேன். ஆனாலும் துன்பம் தொடர்கிறது என்றால், ஒன்று இன்னமும் பூர்வீக பாவங்கள் குறையவில்லை என்பது பொருள். அஃதோடு சேர்ந்து, தற்காலத்திலும் அறிந்தும், அறியாமலும் இன்னும் பாவங்களைச் செய்துகொண்டிருக்கிறான் என்றும் பொருளாகும்.

எனவே, அவனவன் தன் மனசாட்சியின்படி, தன்னுடைய நேர்மையைக் கொஞ்சம்கூட ஒதுக்கி வைக்காமல், தன்னைத்தானே ஆய்வுசெய்து பார்த்தால், எங்கே தவறு இருக்கிறது? என்றும், ஏன் வாக்குகள் வரவில்லை? என்பதும் அவனவனுக்கே புரிய வரும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 12 ஜூலை, 2026

துளிகள் - 21 - ராகுகாலம், எமகண்டம், குளிகைக் காலம் – இவற்றை எப்போது பார்க்க வேண்டும்? காரணம் என்ன?


இது போன்ற ஜாதக மற்றும் நேர காலங்களை எல்லாம் ஒரு மனிதன் சுயநலமாக லோகாய ஆதாயம் கருதி செய்யக்கூடிய செயலுக்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பொது நலம் கருதி செய்யக்கூடிய, பொது சேவை கருதி செய்யக்கூடிய, சிகிச்சை அல்லது அவசரமான மருத்துவ உதவி இது போன்ற தருணங்களில் இவற்றை பார்க்கக்கூடாது. எனவே பொதுவான நன்மைகளை கருதி செய்யக்கூடிய காரியங்கள், தர்ம காரியங்கள், வழிபாடுகள், யாகங்கள், ஆலய தரிசனங்கள் இவற்றிற்கு இது பொருந்தாது. சுயநலமாக செய்யக்கூடிய செயல், லோகாய ரீதியாக செய்யக்கூடிய செயல், ஒரு இல்லம் வாங்க வேண்டும், ஒரு வாகனம் வாங்க வேண்டும், புதிதாக ஆடை வாங்க வேண்டும், வீட்டிற்கு ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றெல்லாம் ஒரு மனிதன் முடிவெடுக்கும் தருணம் அவனுடைய ஜாதகத்திற்கு ஏற்ற ஒரு காலமாக பார்த்துக் கொள்வது ஏற்புடையது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 4 ஜூலை, 2026

துளிகள் - 20 - இறப்புக்குப் பின் செய்யப்படும் சடங்குகளின் உண்மையான நோக்கம்!


ஒரு மனிதன் இறந்துவிட்டால் செய்ய வேண்டிய கடமைகளை, சித்தர்கள் நாங்கள் வகுக்கவில்லை. உடலைப் பிரிந்த ஆத்மா, உடலை விட்டதை அறியாமல், மிகுந்த குழப்பத்துடன் அலையும். அதற்கு தனது நிலையை உணர்த்துவதற்காகவே இச்சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.

இளம் வயதுடையவர் ஒருவர் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தில் மிகுந்த அளவில் வருத்தம் சில நாட்கள் இருக்கும். மனவருத்தத்துடன் கோவில்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே முன்காலத்திலிருந்து தடைகளை வைத்திருக்கிறார்கள். நன்றாக வாழ்ந்து, அதிக வயதில் ஒருவர் இறந்தால் அந்தக் குடும்பத்தில் மனவருத்தம் மிகக் குறைந்த நாட்களே இருக்கும். பின்னர் அவரவர் தங்கள் பொறுப்பை நோக்கி நகர்ந்து விடுவார்கள்.

வருத்தம் இல்லை என்றால் கோவிலுக்குச் செல்லலாம் என்பதை உணர்த்துவதற்கே, ஒருவர் இறந்த பின் அந்தக் குடும்பத்தினர், அவரவர் பிரிவின்படி 13 அல்லது 16 போன்ற நாட்களில் கோவிலுக்குச் சென்று வரும் நிகழ்ச்சியைச் சேர்த்துள்ளார்கள். கோவிலுக்குச் சென்று ஸ்வாமியை தரிசிக்கும் பொழுது வேண்டுதல்கள் வைக்கலாம்; தவறில்லை. ஆனால் மனதில் வருத்தம் இருக்கக்கூடாது. வருத்தத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட மன அமைதி இருக்கலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!