கோடி, கோடியாக அள்ளிக்கொடுத்த தர்மனை விட, பல நாள் பட்டினியாகக் கிடந்த அந்த அந்தணன், தன் பசி, தன் குடும்பப் பசி அனைத்தையும் மறந்து, வந்திருந்த முனிவருக்குத் தந்த அன்னமே உயர் அன்னமாகி, அதுவே உயர் தர்மமாகிவிட்டது. தர்மம் என்பது அளவைப் பொறுத்ததல்ல. சத்தியம் என்பது சூழ்நிலையைப் பொறுத்ததல்ல. விளைவு, இருக்கும் சூழல் — இவற்றைப் பொறுத்ததே.
இருப்பதில் கொடுப்பது சிறப்பு என்றால், இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.
உயர்ந்த கருத்துக்களைக் கேட்பதும், மனதில் பதிய வைப்பதும், சத்சங்கம் நடத்துவதும் மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றவும் முயல வேண்டும்.
"இதெல்லாம் யாரால் இயலும்? கலிகாலத்தில் இதெல்லாம் சாத்தியமா? உயர்ந்த பழக்கவழக்கங்கள் கேட்பதற்கும், ஓதுவதற்கும், விவாதம் செய்வதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பின்பற்றக் கடினமாக உள்ளது" என்று ஒருவன் கூறினால், நல்லவனாக, உயர்வானவனாக வாழ்வது எளிது என்றால், அனைவரும் அவ்வாறு வாழ்ந்துவிட்டு போவார்களே? அது கடினம் என்பதால்தான் அதற்குரிய மரியாதையும் அதிகமாக இருக்கிறது.
ஏன்?
செல்வம் திரட்டுவதைவிட கடினம் இந்தக் காலத்தில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது.
ஆக, "இதனால் நான் இந்தத் தவறை செய்தேன். இந்த சூழ்நிலையால் நான் அடிபணிந்து போக வேண்டியிருந்தது" என்று எந்தக் காரணமும் கூறாமல், ஒரு மனிதன் சத்தியவானாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் செல்லத் தொடங்கிவிட்டால், இறைவன் அவனை நோக்கி வருவான் என்பது உறுதி.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!