சனி, 5 செப்டம்பர், 2026

துளிகள் - 58 - தெய்வீகப் பொருட்களின் பலன் — அணிவதில் அல்ல, ஆன்ம உயர்வில்!


இந்த வாக்கை உட்பொருளாக சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

ருத்ராட்சமாகட்டும், அல்லது துளசி ஆரமாகட்டும், இன்னும் இறை சார்ந்த பிற பொருளாகட்டும், கட்டாயம் உயர்விலும் உயர்வு. அதனை யாங்கள் மறுக்கவில்லை.

ஆனால் ஒரு மிகப்பெரிய செல்வந்தன் கையிலே தனத்தை வைத்துக்கொண்டு, அன்ன அங்காடிக்கு அருகே அமர்ந்து கொண்டு, மூன்று தினங்களாக பசி, பட்டினி, உயிர் போகிறது, மயக்கம் வருகிறது என்று புலம்பிக்கொண்டு இருந்தால், பார்ப்பவர்கள் என்ன கூறுவார்கள்?

‘ஏனப்பா, நீயோ வறியவனல்ல, செல்வந்தன். உன் கையிலே நிறைய தனம் இருக்கிறது. அருகிலே அன்னம் விற்கும் அங்காடியும் இருக்கிறது. சென்று பசியாற்றிக் கொள்ள வேண்டியதுதானே?’ என்று.

அதைப் போல, இது போன்ற உயர்ந்த, தெய்வீக பொருட்களையெல்லாம் தேகத்தில் அணிந்து கொண்டு, தோற்றத்தில் மட்டும் தெய்வீகத்தைக் காட்டிக்கொண்டு, உள்ளத்திலே மிக, மிக சராசரியாக நடந்து கொள்கின்ற மனிதனுக்கு இது போன்ற உயர்ந்த பொருள்களால் எந்தவிதமான பலனும் இல்லை.

மனிதன் வினவலாம், ‘உண்மையில் இது உயர்ந்த விஷயம் என்றால், அதை அணிந்து கொண்ட மனிதன் தாழ்ந்த மனிதனாக இருந்தாலும், அவனையும் இது உயர்த்த வேண்டியதுதானே?’ என்று.

கட்டாயம் உயர்த்தும். ஒரு அடி உயர வேண்டும் என்று அவன் நினைத்தால், கட்டாயம் இறைவன் இந்தப் பொருள்கள் இல்லாமல் கூட உயர்த்தி வைக்க சித்தமாக இருக்கிறார்.

ஆனால் அப்படியொரு எண்ணமே இல்லாத மனிதனை, இன்னும் எத்தனை பிறவி தாண்டி இந்த ஆன்மா உயரப் போகிறதோ, அந்தப் பிறவியில் உயர்த்திக் கொள்ளலாம் என்று இறையே அமைதியாக இருக்கும் பட்சத்திலே, யாங்களும் அமைதியாகத்தான் இருக்கிறோம்.

ஆதலால், ருத்ராட்சம் போன்ற பொருள்களும் தங்கள் அலைவரிசையைக் காட்டாமல் அமைதியாகத்தான் இருக்கும்.

ஆனால் சிறிது பக்குவமடைந்த, சிறிது பரிசுத்தம் உடைய மனிதர்கள் இதனை மந்திர சுத்தி செய்து, தொடர்ந்து மந்திரம் ஜெபித்துக் கொண்டே அணிந்து கொண்டால், கட்டாயம் நல்ல பலனை அனுபவ ரீதியாகப் பார்க்கலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக