சனி, 18 ஜூலை, 2026

துளிகள் - 30 - உணர்ந்து திருந்துவதே இறைவனின் விருப்பம்!


ஒவ்வொரு ஆன்மாவும் பிறவியெடுத்ததின் நோக்கம், பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும், புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும்கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள் தோறும் இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும், துயரமும், மனவேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவதுபோல தவறு செய்யும்பொழுதே ஒரு மனிதனை தடுத்துவிடலாமே ? தண்டித்து விடலாமே ? என்ற பார்வையிலே பார்த்தால், இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன் ? அதைவிட படைக்கும்பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும். நல்லதையே எண்ணவேண்டும், நல்லதையே உரைக்கவேண்டும் நல்லதையே செய்யவேண்டும் என்று இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே? ஆனால் அவ்வாறு இல்லாமல் இஃதொப்ப நிலையிலே மனிதர்களுக்கு எல்லாவகையான சுதந்திரங்களையும் தந்து, அவனை, பல்வேறு தருணங்களில் அவன் போக்கிலேவிட்டு ‘ இஃது நல்லது, இஃது தீயது, இஃது தக்கது, இஃது தகாதது ‘ என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து, இயல்பாக ஒருவன் நல்லவனாக மாறவேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன் அதாவது தான் கண்காணிக்கப்படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ, அச்சத்தினாலோ அல்லது வேறு எஃதாவது உபாதை ஏற்பட்டுவிடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 29 - தடைகள் வந்தாலும் தர்மத்தை விடாதே!


கொடுத்துக்கொண்டேயிரு. காற்று எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் வீசுகிறதோ, சூரிய ஒளி எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் படுகிறதோ, மழை எவ்வாறு நல்லவன், தீயவன் என்று பாராது பொழிகிறதோ அதைப்போல பொதுவாக செவியில் பிறர் குறை விழுந்த உடனோ அல்லது தெரிந்த உடனோ உன்னால் முடிந்தவரை முயற்சி செய்து தீர்த்துக்கொண்டேயிரு. 

இதில் எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை ஏளனங்கள் வந்தாலும் அதையெல்லாம் அமைதியாக ஏற்றுக்கொண்டேயிரு. ஏனென்றால் ஒருவகையில் தர்மம் செய்வது எளிது. இன்னொரு வகையில் கடினம். எப்பொழுது கடினம் ? தர்மம் செய்ய, செய்ய, இறைவன் சில சோதனைகளை வைப்பார். அதையெல்லாம் தாண்டி இந்த ஆத்மா வருகிறதா ? என்று பார்ப்பார். உடன் இருப்பவர்களை வைத்தே எதிர்ப்பு காட்ட வைப்பார். ‘ இப்படி கொடுத்துக்கொண்டே போனால் நாளை உனக்கு ஒரு தேவை என்றால் என்ன செய்வாய் ? என்பதுபோன்ற அச்சமூட்டும் வினாக்களையெல்லாம் பிறரை கேட்க வைப்பார். இதுபோன்ற தருணங்களிலெல்லாம் மனம் தடுமாறாமல், சோர்வடையாமல் தொடர்ந்து நல்ல வழியில் சென்றுகொண்டே இருக்கவேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 28 - விரும்பியதை விலக்கும்போதுதான் ஆன்மப் பயணம் தொடங்குகிறது!


நல்ல கர்மாக்களின் எதிரொலியால் விளைகின்ற நல்ல விஷயங்களை மனிதன் அனுபவித்து போகட்டும் என்று இறைவன் உத்தரவிட்டாலும், அவன், அதிலேயே ஒட்டி நின்று ஆன்ம வழியை காணாமல், இகபர விஷயங்களுடன் ஒட்டிக்கொண்டு விடுகிறான். ஆகவே, சிறப்பாக இருந்தவனைக் கூட சில நேரங்களில் யாங்கள் கீழே இறக்க வேண்டி உள்ளது. மனம் பக்குவம் அடைவது என்பது அத்தனை எளிதல்ல. மனிதன் எப்பொழுது, மிக விரும்பி அடைந்த விஷயத்தை கூட வேண்டாம் என விலக்கி வைக்க தொடங்குகிறானோ, அந்த நொடி முதல் எங்கள் பாதையில் நடக்க தொடங்கிவிட்டான் என்று பொருள்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 27 - பிறருக்காகப் பிரார்த்திப்பவன், இறையருளின் பாதையை அடைவான்!


நாடி மீது நம்பிக்கை வந்து, தர்மத்தின் மீது நாட்டம் வந்து சத்தியத்திலும் பிடிப்பு வந்தால், இறைவனருள் அவர்களை வழிநடத்தும். யாமும் ஜீவ அருள் ஓலை மூலம் வழி நடத்துவோம். பொதுவாக சிலரை அழைத்து சத்சங்கமாக வாக்கை கூறவேண்டும் என்று யாம் எண்ணினாலும், எம்மைப் பொருத்தவரை ஒருவன் தீய வழியில் சென்றாலும், நல்ல வழியில் சென்றாலும் எமது சேய்களே. நல் வழிப்படுத்த வேண்டியது எமது கடமை என்றாலும் இறைவன் அனுமதித்தால் நாளை கூட அதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். எனவே இறைவனிடம் எல்லோரும் பிரார்த்தனை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மனிதர்களுக்கு புண்ணியம் சேர்த்துக்கொள்ள எத்தனையோ வழிகளை இறைவன் அளித்துள்ளான். அதில் ஒன்று பிறருக்கான பிரார்த்தனை. முகம் பாராமல் பிறர் துன்பங்களுக்கு பிரார்த்திப்பவன், விரைவில் எங்கள் அருகில் வருவான். யாமும் வழிநடத்துவோம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 17 ஜூலை, 2026

துளிகள் - 26 - இறைவனுக்கு பிடித்தபடி வாழ்ந்தால், சித்தர்களே உங்களைத் தேடி வருவார்கள்!


ஒருவனுக்கு ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றால், அவனுக்கு, சித்தர்கள் மீதும், இறைவன் மீதும் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவனுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு வழியாக உள்புகுந்து செய்தியை அவனுக்கு தெரிவித்து விடுவோம். அதற்கு, ஓலைச்சுவடியோ, நேரில் தோன்றவேண்டும் என்பதோ தேவை இல்லை!

எனவே, ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தால், இறைவனுக்கு பிடிக்குமோ, அதை கண்டுபிடித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், எங்கள் தரிசனமும், அருகாமையும் இயல்பாக கிடைக்கும். அனைத்தும் ஒரு மனிதன் நடந்து கொள்வதில்தான் உள்ளது.

வாக்குரைத்தவர் அகத்தியப்பெருமான்!

துளிகள் - 25 - நல்லதைச் செய்யும்போது மனக்குழப்பம் வந்தால், பாவம் இன்னும் குறையவில்லை என்று பொருள்!


யார் என்ன கூறினாலும் மனக்குழப்பம் அடையாமல் நாங்கள் முன்பே கூறியது போல், தவறை செய்கின்ற மனிதன் தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து, பாவத்திற்கு மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் யார் சொன்னாலும் கேட்கிறானா ? யார் சொன்னாலும் தன்னை மாற்றிக்கொள்கிறானா ? தவறு செய்கின்ற மனிதனுக்கு இருக்கின்ற உறுதி ஏனடா நல்லது செய்கின்ற மனிதனுக்கு இல்லாமல் போகிறது ? ஏன் தடுமாற்றம் வருகிறது ? ஏன் குழப்பம் வருகிறது ? அங்கு இப்படி கூறுகிறார்கள், இங்கு இப்படி கூறுகிறார்கள், இதை இப்படி நம்பவேண்டும், அதை அப்படி நம்பவேண்டும், இங்கு கூறுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை என்றெல்லாம் ஏன் குழப்பம் வருகிறது ? குழப்பம் வருகிறது என்றாலே பாவங்கள் இன்னும் இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே தொடர்ந்து அறவழியில். சத்யவழியில் அனைவரும் வர நல்லாசிகள்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

துளிகள் - 24 - விதியை மாற்ற மகான்கள் போராடியும் மனிதன் ஏன் மாறுவதில்லை?


இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப மனிதர்களின் உலக வாழ்வு எக்காலத்திலும் என்றென்றும் விதிவசம்தான் என்பது எம்போன்ற மகான்கள் அறிந்த ஒன்றுதான். இவைகளைத் தாண்டி மனிதர்களை ஓரளவு மெல்ல, மெல்ல மேலேற்ற, கடைத்தேற்ற, கரையேற்ற இறைவழி, அறவழி அழைத்து செல்லவே மகான்கள் காலகாலம் போராடுகிறார்கள். ஆயினும்கூட யாம் அடிக்கடி இயம்புவது போல பெரும்பாலான பொழுதுகளில் விதிதான் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது. இஃதொப்ப சராசரியாகவே வாழ்ந்து உண்டு, உறங்கி எஃதும் தெரியாமல் வெறும் புலன் கவர்ச்சிக்கு மயங்கி வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகளைத் தாண்டி இறை என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகின்ற கூட்டம் ஒருபுறம். இந்த இரண்டையும் தாண்டி ஒரு குருவை நாடுவோம். குருவை தொட்டு, தொட்டு மேலேறுவோம் என்று வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஓலைகளிலே சித்தர்கள் வாக்கு உரைக்கிறார்கள். அதனைக் கேட்டு வாழ்க்கையின் துன்பங்களை நீக்கிக்கொள்வோம். அஃதோடு உண்மையான ஞானவாழ்வையும் அறிந்துகொள்வோம் என்று இருக்கின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும்விட இதில் எந்த நிலையில் ஒரு மனிதன் நின்றாலும் அவன் மதியில் விதி அமர்ந்துகொண்டு ஆட்டுவிக்கிறது என்பது உண்மை.

அந்த விதியை மாற்றத்தான் யாங்களும் எங்கள் நிலையிலிருந்து மிக,மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில் பல்வேறுவிதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே ஏறத்தாழ 9 ஆண்டுகாலம் எந்தவிதமான ( பாவ ஆத்மா, புண்ணிய ஆத்மா என்ற ) கணக்கினையும் பார்க்காமல், இன்னும் கூறப்போனால் புண்ணியம் அதிகம் செய்த, செய்கின்ற ஆத்மாக்களைவிட பாவங்களை அதிகம் சுமந்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களுக்கும் சேர்த்து வாக்குகளை விதவிதமாக உரைத்திருக்கிறோம். ஆயினும்கூட எப்படி ஒரு செவிடன் செவியிலே எதைக்கூறினாலும் ஒன்றும் நுழையாதோ அதைப்போலதான் நடந்துகொண்டிருக்கிறது. இயல்பாக சாத்வீகமாக எதையும் நல்லவிதமாக பார்க்கக்கூடிய தன்முனைப்பு குறைந்த ஆத்மாக்களை கரையேற்றுவது என்பது எளிது. அதாவது ஏற்கனவே நன்றாக படிக்கக்கூடிய மாணாக்கனை மேலும் நன்றாக படிக்கவைப்பது போல. ஆனால் சற்றும் கல்வி ஏறாமல் திணறிக்கொண்டு இருக்கக்கூடிய, கல்வி என்றாலே வெறுக்கக்கூடிய ஒரு மாணவனை மேலேற்றுவதுதான் ஆசிரியருக்கு சவாலாக இருக்கும். அந்த வழிமுறையையும் நாங்கள் கையாண்டு இங்கு வருகின்ற பலருக்கு தராதரம் பார்க்காமல் நாங்கள் வாக்கைக் கூறியது உண்டு. ஆயினும்கூட வழக்கம்போல் விதி வென்று அவர்கள் (விதிப்படி) வாழத்தான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. இறைவன் தந்த அறிவை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தாத மனிதன் எந்த இடத்தில் பயன்படுத்தக்கூடாதோ அந்த இடத்தில் பயன்படுத்துகிறான். சதாசர்வகாலம் மிருகவெறி கொண்டு அலைவதும், தன்முனைப்பும், ஆணவமும் கொண்டு அலைவதும், நல்ல புண்ணியம் செய்கின்ற ஆத்மாக்கள் மனம் நோக நடந்துகொள்வதும்தான் இங்கு வருகின்ற பெரும்பாலான ஆத்மாக்களின் இயல்பாக இருக்கிறது. கடும் சினமும், ஆணவமும் கட்டாயம் உலக வாழ்க்கையை மட்டுமல்ல மேலுலக வாழ்க்கையைக்கூட தராது தடுத்துவிடும் என்பதை உணரவில்லை. உணர்ந்தாலும் அதை பெரிதாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

எல்லாம் விதிதான் என்றால் மதிக்கு என்ன வேலை இருக்கிறது ? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்கவேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான் விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய்விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட மனித வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எஃதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம்தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான் இருந்தாலும் அதனையும் நாங்கள் செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே ? அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே ? என்றுதான். ஆனாலும் வழக்கம்போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வியாழன், 16 ஜூலை, 2026

துளிகள் - 23 - மனிதன் தர்மத்திற்கு கணக்கிட்டால், விதி கணக்குத் தீர்க்கும்!


தான தர்மத்தின் இன்னொரு முகம்!

இறைவன் அருளாலே யாம் உணர்த்துவதை விட விதி நன்றாக உணர்த்திவிடும் அப்பா. இரந்து கேட்கும்பொழுது தராத மனிதனுக்கு இறைவன் கள்வனை படைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தன்னை சுற்றி நடக்கின்ற பல்வேறு நிகழ்வுகளிலே துன்பப்படும், துயரப்படும் மனிதனைப் பார்த்து அங்கே நல்ல குணத்தை பயன்படுத்த வேண்டும். அங்கே அறிவை பயன்படுத்தக்கூடாது. ‘இவன் உதவி கேட்கிறான். இவனுக்கென்ன ? . தேகம் ஆரோக்யமாகத்தானே இருக்கிறது. இவன் கையேந்துவது தகாதது. இவனுக்கு எதற்கு தரவேண்டும் ? ‘ என்று இவனாகவே ஒரு முடிவிற்கு வருகிறான். அடுத்தவனை பார்க்கிறான் ‘ இவனுக்கென்ன ? இவன் குடும்பத்தில் இவனுக்கு போதிய ஊதியம் இல்லையென்றாலும் உடன் பிறந்தவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள் ? அவர்கள் செய்யட்டுமே ? அவர்களுக்கே இல்லாத அக்கறை நமக்கு எதற்கு ? நாம் ஏன் இதிலே ஈடுபடவேண்டும் ? ‘ அடுத்து இன்னொருவனை பார்க்கிறான். ‘ இவனுக்கென்ன ? நன்றாகத்தானே இருக்கிறான். இவன் முட்டாள்தனமாக வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்துவிட்டால் அதற்கு நானா பொறுப்பு ? நான் எதற்கு அதிலே தலையிடவேண்டும் ? ‘ என்றெல்லாம் மனிதன் தன் கைப்பொருளை இழப்பதற்கு முன்னால் மிக தந்திரமாக சிந்தனை செய்வதில் சாமர்த்தியத்தைக் காட்டுகிறான். பிறகு விதியும் தன் சாமர்த்தியத்தைதான் காட்டுமப்பா. எனவே அப்படியெல்லாம் அள்ளி, அள்ளி தருகின்ற மனிதர்களையே விதி விடுவதில்லை எனும் பொழுது மற்றவர்களின் நிலையை எண்ணிக்கூட பார்க்கத் தேவையில்லை.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

திங்கள், 13 ஜூலை, 2026

துளிகள் - 22 - துன்பம் தொடர்ந்தால் எங்கே தவறு இருக்கிறது என்பதை ஆராயுங்கள்!


நான் சரியாகத்தான் இருக்கிறேன். நான் நேர்மையாகத்தான் நடக்கிறேன். நான் ஒழுங்காகத்தான் எல்லாவகையிலும் வாழ்கிறேன். ஆனாலும் துன்பம் தொடர்கிறது என்றால், ஒன்று இன்னமும் பூர்வீக பாவங்கள் குறையவில்லை என்பது பொருள். அஃதோடு சேர்ந்து, தற்காலத்திலும் அறிந்தும், அறியாமலும் இன்னும் பாவங்களைச் செய்துகொண்டிருக்கிறான் என்றும் பொருளாகும்.

எனவே, அவனவன் தன் மனசாட்சியின்படி, தன்னுடைய நேர்மையைக் கொஞ்சம்கூட ஒதுக்கி வைக்காமல், தன்னைத்தானே ஆய்வுசெய்து பார்த்தால், எங்கே தவறு இருக்கிறது? என்றும், ஏன் வாக்குகள் வரவில்லை? என்பதும் அவனவனுக்கே புரிய வரும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 12 ஜூலை, 2026

துளிகள் - 21 - ராகுகாலம், எமகண்டம், குளிகைக் காலம் – இவற்றை எப்போது பார்க்க வேண்டும்? காரணம் என்ன?


இது போன்ற ஜாதக மற்றும் நேர காலங்களை எல்லாம் ஒரு மனிதன் சுயநலமாக லோகாய ஆதாயம் கருதி செய்யக்கூடிய செயலுக்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பொது நலம் கருதி செய்யக்கூடிய, பொது சேவை கருதி செய்யக்கூடிய, சிகிச்சை அல்லது அவசரமான மருத்துவ உதவி இது போன்ற தருணங்களில் இவற்றை பார்க்கக்கூடாது. எனவே பொதுவான நன்மைகளை கருதி செய்யக்கூடிய காரியங்கள், தர்ம காரியங்கள், வழிபாடுகள், யாகங்கள், ஆலய தரிசனங்கள் இவற்றிற்கு இது பொருந்தாது. சுயநலமாக செய்யக்கூடிய செயல், லோகாய ரீதியாக செய்யக்கூடிய செயல், ஒரு இல்லம் வாங்க வேண்டும், ஒரு வாகனம் வாங்க வேண்டும், புதிதாக ஆடை வாங்க வேண்டும், வீட்டிற்கு ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றெல்லாம் ஒரு மனிதன் முடிவெடுக்கும் தருணம் அவனுடைய ஜாதகத்திற்கு ஏற்ற ஒரு காலமாக பார்த்துக் கொள்வது ஏற்புடையது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 4 ஜூலை, 2026

துளிகள் - 20 - இறப்புக்குப் பின் செய்யப்படும் சடங்குகளின் உண்மையான நோக்கம்!


ஒரு மனிதன் இறந்துவிட்டால் செய்ய வேண்டிய கடமைகளை, சித்தர்கள் நாங்கள் வகுக்கவில்லை. உடலைப் பிரிந்த ஆத்மா, உடலை விட்டதை அறியாமல், மிகுந்த குழப்பத்துடன் அலையும். அதற்கு தனது நிலையை உணர்த்துவதற்காகவே இச்சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன.

இளம் வயதுடையவர் ஒருவர் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்தில் மிகுந்த அளவில் வருத்தம் சில நாட்கள் இருக்கும். மனவருத்தத்துடன் கோவில்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே முன்காலத்திலிருந்து தடைகளை வைத்திருக்கிறார்கள். நன்றாக வாழ்ந்து, அதிக வயதில் ஒருவர் இறந்தால் அந்தக் குடும்பத்தில் மனவருத்தம் மிகக் குறைந்த நாட்களே இருக்கும். பின்னர் அவரவர் தங்கள் பொறுப்பை நோக்கி நகர்ந்து விடுவார்கள்.

வருத்தம் இல்லை என்றால் கோவிலுக்குச் செல்லலாம் என்பதை உணர்த்துவதற்கே, ஒருவர் இறந்த பின் அந்தக் குடும்பத்தினர், அவரவர் பிரிவின்படி 13 அல்லது 16 போன்ற நாட்களில் கோவிலுக்குச் சென்று வரும் நிகழ்ச்சியைச் சேர்த்துள்ளார்கள். கோவிலுக்குச் சென்று ஸ்வாமியை தரிசிக்கும் பொழுது வேண்டுதல்கள் வைக்கலாம்; தவறில்லை. ஆனால் மனதில் வருத்தம் இருக்கக்கூடாது. வருத்தத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட மன அமைதி இருக்கலாம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 28 ஜூன், 2026

துளிகள் - 19 - விதியை வெல்லும் வழி – இறைபிரார்த்தனையும் புண்ணிய பலமும்!


விதி தன்னுடைய கடமையை பரிபூரணமாக செய்ய வேண்டும் என்றுதான் நவகிரகங்களிடம் அந்தப் பணி இறைவனால் ஒப்படைக்கப்பட்டு, ஒவ்வொரு காலமும், ஒவ்வொரு யுகமும், அந்த யுக தர்மத்திற்கேற்ப அனைத்தும் மிகத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலே மகான்கள் ஆனாலும் சரி, ஏன்?, இறைவனே ஆனாலும் சரி, எந்த அளவு தலையிட இயலும்? யாருக்காக தலையிட இயலும்? எந்த ஆத்மாவிற்கு, எந்த காலகட்டத்தில் தலையிட இயலும்? என்றெல்லாம் மிகப்பெரிய கணக்கு இருக்கிறது. ஆயினும் கூட ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி, சந்தோஷம், நிரந்தரமான திருப்தி இவைகள் கட்டாயம் புறத்தேயிருந்து வருவது அல்ல. ஒரு மனிதன் எதைக் கேட்டாலும் இறைவன் தருவதாக வைத்துக் கொண்டாலும், அது கிடைக்க, கிடைக்க அந்த மனிதனுக்கு நிம்மதியும், சந்தோஷமும் வருவதற்கு பதிலாக மேலும், மேலும் மன உளைச்சல்தான் வரும். அதே சமயம் விதிக்கு எதிராக சில, சில விஷயங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனருளால் யாங்கள் சில வழிமுறைகளையும், பரிகாரங்களையும் கூறுகிறோம். விதி கடுமையாக இருக்கும்பொழுது அதனை எதிர்த்து போராடுகின்ற மனிதனுக்கு அந்த அளவு புண்ணிய பலமும், ஆத்ம பலமும் இருக்க வேண்டும். சராசரியான பிரார்த்தனைகளும், வழிபாடுகளும், சிறிய தர்மமும் அத்தனை எளிதாக விதியை மாற்றி விடாது. எனவே விதியை மீறி ஒருவன் எண்ணுவது நடக்க வேண்டுமென்றால் மனம் தளராமல் தொடர்ந்து இறை பிரார்த்தனையில் ஈடுபடுவதோடு புண்ணிய பலத்தையும் எல்லா வகையிலும் அதிகரித்துக் கொண்டு, சுய பிரார்த்தனையினால் ஆத்ம பலத்தையும் அதிகரித்து மனம் தளராமல் போராட கற்றுக் கொள்ள வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 27 ஜூன், 2026

துளிகள் - 18 - நற்குணம் கொண்டவருக்கு எல்லா நாளும் திருநாளே!


இறைவனை உள்ளன்போடு ஒரு மனிதன் எப்பொழுதெல்லாம் வணங்குகிறானோ, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வணங்குகிறானோ, அப்படி வணங்குகின்ற அந்த குணம் கொண்ட மனிதன், மனித நேயத்தையும் மறக்காமல் இருக்கிறானோ, மனித நேயத்தோடு தன் கடமைகளையும் சரி வர ஆற்றுகிறானோ, அப்படி வாழ்கின்ற மனிதனுக்கு எல்லா காலமும் பிரதோஷம்தான். எல்லா காலமும் சதுர்த்திதான். எல்லா காலமும் அவனைப் பொருத்தவரை மார்கழி மாதம்தான். எல்லா காலமும் சிவராத்திரிதான். எல்லா காலமும் நவராத்திரிதான். எனவே இது போன்ற திதியின்படி, நக்ஷத்திரத்தின்படி சில விசேஷங்கள் வகுக்கப்பட்டது, அன்றாவது ஒரு மனிதன் தன் புறக்கடமைகளை விட்டு,விட்டு முழுக்க, முழுக்க இறை வழியில் செல்லட்டுமே என்பதற்காகத்தான். எனவே எல்லா தினங்களும் சிறப்பான தினங்களே ஒரு மனிதன் நடந்து கொள்வதைப் பொறுத்து.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 26 ஜூன், 2026

துளிகள் - 17 - என்னை நீ ஆக்கிவிடு – இறைவனிடம் வைக்க வேண்டிய உயர்ந்த பிரார்த்தனை!


இறைவனைக் காண வேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் மனதினுள் இருக்கும். இப்படிப்பட்ட ஆசையை இறைவனிடம் பிரார்த்தனையாக வைக்கும்பொழுதே, "இறைவா! நீ என்னை ஆட்கொண்டுவிடு. எப்படி என்றால், நீ வேறு, நான் வேறு என்று இல்லாமல், நதியானது தனியாக இருக்கும்பொழுது நதியாகவும், கடலில் சேர்ந்த பின் கடலாகவும் மாறிவிடுவது போல, என்னை நீ ஆக்கிவிடு. அந்த இடத்தில் இது நதி, இது கடல் என்று பிரிக்க முடியாது. அதுபோல என்னை நீ ஆக்கிவிடு" என்ற பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தாலே போதும். இறைவன் நிச்சயம் அனைவருக்கும் அருளுவார்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

சனி, 20 ஜூன், 2026

துளிகள் - 16 - அன்னம் உண்ணும் போது தெய்வங்களை விருந்தாளியாக அழைக்கும் சூட்சுமம்!


அன்னம் உண்ணும் போது கிழக்கு அல்லது மேற்கை நோக்கி அமர்ந்து அன்னபூரணி தாயை தியானித்து, இஷ்ட தெய்வங்களை அழைத்து உடலுக்குள் அமரச் செய்து, மௌனம் கடைப்பிடித்து, இந்த அன்னமானது நல்ல எண்ணங்களைத் தரட்டும், நல்லதைச் செய்கிற சக்தியைத் தரட்டும், தெளிவைத் தரட்டும், ஞானத்தைத் தரட்டும், ஆரோக்கியத்தைத் தரட்டும் என வேண்டிக்கொண்டு தொடர்ந்து உண்டு வந்தால், விருந்தாளியாக அழைக்கப்பட்ட தெய்வம்கூட உள்ளுக்குள் இருந்து அன்னம் உண்பதை நம் மனக்கண்ணில் அல்லது நமது தியானத்தில் சில நாட்களில் காணலாம். அது மிகப் பெரிய ஒரு பாக்கியம் எனக் கூற வேண்டும்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

செவ்வாய், 16 ஜூன், 2026

துளிகள் - 15 - மயானம் கற்பிக்கும் பற்றற்ற வாழ்வின் சூட்சுமம்!


ஆசை அறுக்க வேண்டும், பற்று அறுக்க வேண்டும் என பல கேள்விகளும் இங்கு கேட்கப்படுகிறது. தன்னை அறுக்க தன் வினைகளை அறுக்க சரியான பாடம் மயானத்தில் கற்பிக்க படுகிறது. விரும்பும் ஒருவன், ஒரு இரவு மயானத்தில் அமர்ந்து, தவமாக ஒரு பிணம் எரிந்து அடங்குவதை கண்டு, நடப்பவைகளை உள்வாங்கினால், ஆசையும் பற்றும் அறுப்பதெப்படி என்று உணர முடியும். மனம் ஒன்றுபட்டுவிடும்!

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

துளிகள் - 14 - தெரிந்தே ஏமாறுதல் - ஒரு கர்ம விடுதலை!


இவ்வுலகில், ஏமாறுகிறவன், ஏமாற்றுகிறவன் என இரண்டு வகை மனிதர்களும் உண்டு. அதிலும் தெரிந்தே ஏமாறுகிறவன் சிறந்த பாக்கியசாலி. எப்படி? ஒருவன் அவனுக்கு விதிக்கப்பட்ட கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும். ஆயினும், ஒருவன் ஏமாற்றப்படும் பொழுது, ஏமாறுகிறவன் உணர்ந்தே இழந்தால், அவனை விட்டு நிறைய கர்மாக்கள் ஏமாற்றுகிறவன் கைக்கு போய்விடும். ஏமாற்றியவன், அதை சுமந்து வருந்தி, இன்னும் நிறைய ஜென்மாக்கள் எடுத்து, எப்படி இந்த கர்மாவை கழிப்பது என்று தெரியாமல் தவிப்பான். இது, இழப்பவன், உணர்ந்த நிலையில் மட்டும்தான் சாத்தியம். உணர்ந்தே இழக்கும் பொழுது, இழப்பவனுள் சாட்சி பூதமாக இறைவனே இறங்கி நின்று கொண்டிருப்பான். ஆகவே, ஏமாற்றுபவன் தப்பிக்கவே முடியாது!

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

புதன், 10 ஜூன், 2026

துளிகள் - 13 - ஆலயத்தில் தோன்றும் தாகமும் பசியும் ஒரு தெய்வீக நிமித்தம்!


கோவில் மற்றும் பெரியவர்களோட சமாதி போன்ற இடங்களில் உள்ளே செல்ல முயற்சிக்கும் போது ஒருவருக்கு தாகம், பசி போன்ற உணர்வுகள் திடீரென தோன்றினால் அது ஒரு நிமித்தம். அங்கு இருக்கும் சக்தியானது, "என்ன வேண்டுமோ கேள், உனக்கு ஆசீர்வதிக்க காத்திருக்கிறேன்" என்று சுட்டிக்காட்டுகிற நிமித்தமாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில் வைக்கக்கூடிய பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறும். இந்த உணர்வும் தெளிவும் ஒரு மனிதனுக்கு இருக்க, அவன் நடந்து செல்கிறான் என்றால் மேலும் ஆன்மீகத்தினுடைய படிகளில் முன்னேறுவதற்கு அது அவனுக்கு வழியைக் காட்டும்.

மிக உயர்ந்த நிலையில் உள்ள பெரியவர்கள் இந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் பொழுது, "இறைவா, நீ இருக்கிறாயே, அது ஒன்றே எனக்குப் போதும்" என்று பிரார்த்தனையை கொடுத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

செவ்வாய், 9 ஜூன், 2026

துளிகள் - 12 - ஆட்டிசம் குறைபாடும் ஆன்மீக பரிகாரமும்


மனிதர்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஏற்ப, அடுத்த பிறவியில் அவர்களுக்கான தண்டனை வியாதியாகவோ, உடல் குறைபாடுகளாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையிலோ இறைவனால் வழங்கப்படுகிறது.

ஆட்டிசம் (Autism) எனப்படும் குறைபாடு தற்போது பல குழந்தைகளைப் பாதித்து, அவர்களது பெற்றோருக்கு மனவேதனையை அளித்து வரும் சூழ்நிலை காணப்படுகிறது.

இதில் முக்கியமாக, இந்த குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்று பார்க்கும்போது, சில தவறுகளுக்கான தண்டனைகள் குறித்து தர்ம சாஸ்திரங்களில் குறிப்புகள் கூறப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில ஆத்மாக்கள் செய்த தவறுகளை ஒரு குறிப்பிட்ட தண்டனையின் கீழ் வகைப்படுத்த முடியாத சூழ்நிலையில், பலவிதமான தவறுகளின் விளைவாக இத்தகைய நோய்கள் அல்லது குறைபாடுகள் இறைவனால் வழங்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

பூர்வ ஜென்மத்தில் செய்த தவறுகள் என்னவென்று புரியாத நிலையிலும், தாங்கள் எவ்வாறு வாழ்கிறோம் என்பதையும் முழுமையாக உணர முடியாத நிலையிலும், பெற்றோர்களுக்கும் இத்தகைய குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற விதி அமையும்போது, இவ்வாறான வாழ்க்கை அமைந்து விடுகிறது.

மருத்துவ ரீதியாக பல சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், ஆன்மீக ரீதியாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் நடராஜ மூர்த்தி ஆகிய மூன்று தெய்வங்களையும் வீட்டில் வைத்து தினமும் வழிபட்டு வந்தால், இந்த ஆட்டிசம் குறைபாடுகள் மெதுவாக நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 5 ஜூன், 2026

துளிகள் - 11 - குருவை இகழும்போது சீடன் எப்படி நடக்க வேண்டும்?


மனத்தால் ஒருவரை குருவாக வரித்துக் கொண்டுவிட்டால், அவர் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும், அவரது வார்த்தைகள் ஒருவர் மனதுக்கு அமைதியை தந்தால், அவரது வழிநடத்தல் நிறைய நல்லதை, நல்ல விஷயங்களை வாழ்வில் அளித்தால், அவர் குரு ஸ்தானத்துக்கு உரியவர்.

சீடர், மனதுள் குருவுக்கான மரியாதையை பிரார்த்தனை வழி கொடுத்தாலும் போதும்.

அதே நேரத்தில், சீடத்துவத்தை சோதிக்கும் படி மூன்றாவது மனிதர் குருவை இகழ்ந்தால், ரௌத்ரம் உள்ளே பொங்கினாலும், கட்டுப்பாடுடன் அமைதியாக அங்கிருந்து, "சிவ சிவா" என்று கூறி செவி பொத்தி விலகி விட வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.

இந்த கட்டுப்பாடு எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. யாராகினும், குருவை குறை கூறுவதை கேட்கும் பொழுது, அப்படி ரௌத்திரம் பொங்கி வார்த்தைகளை சிதறவிட நேர்ந்தால், இறையை துணைக்கழைத்து, நாக்கின் நுனியிலிருந்து வாக்குகளை உதிர்க்கலாம்.

உதிர்த்த வாக்குகள் குறிப்பிட்ட காலத்தில் அதன்படியே அவர்கள் வாழ்க்கையில் நடந்தால், அது இறை செயல், நம் செயல் அல்ல என்று உணர வேண்டும்.

ஆனால், எந்த காரணம் கொண்டும் எதிரே பேசுபவர் உயிர் போகிற அளவுக்கான வார்த்தைகளை பேசக்கூடாது. அது பிரம்மஹத்தி தோஷத்தை கொண்டு தந்து விடும்.

ஆனால் ஒன்றை கவனிக்கவும். வாக்கை உதிர்த்துவிட்டால், அடுத்த நொடி முதல் விஸ்வாமித்ரர் நிலை தான் நமக்கு. நாம் அன்று வரை சேர்த்துக் கொண்ட தவசக்தியின் பெரும் பகுதியை இழந்துவிடுவோம்!

மறுபடியும் நிறைய தவம் செய்ய வேண்டும், பழைய நிலையை அடைய!

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

வியாழன், 4 ஜூன், 2026

துளிகள் - 10 - வீட்டில் விளக்கு ஏற்றும் மற்றும் அணைக்கும் சரியான முறை


​தினமும் வீட்டில் இரண்டு நேரம் விளக்கேற்ற வேண்டும் — ஒன்று காலை, மற்றொன்று மாலை. விளக்கினை ஏற்ற தீக்குச்சியை உரசி அக்னியை உருவாக்கியதும், அனைத்து தெய்வங்களின் பார்வை படும் படி காட்டிவிட்டு, மனதுக்குள் "உங்கள் பார்வை பட்ட அக்னிதான் விளக்கில் ஜொலிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்துக்கொண்டு, 'ஓம்' என்று கூறி திரிக்கு அக்னியை தரவேண்டும். இவ்வாறு விளக்கினை ஏற்ற வேண்டும்.

​அதேபோல் விளக்கினை அணைக்கும் போது 'ஓம்' என்று கூறிகொண்டே திரியை எண்ணெய்க்குள் இழுத்து விட வேண்டும். கையால் அணைப்பதோ அல்லது ஊதி அணைப்பதோ கூடாது.

​வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்

துளிகள் - 9 - உடம்பின் அழுக்குகளை நீக்கி நோயின்றி வாழ அகத்தியர் & தேரையர் சித்தர் அருளிய மந்திரங்கள்

புதன், 3 ஜூன், 2026

துளிகள் - 8 - உடல் சூடு, சைனஸ், கண் பார்வை: அகத்தியர் காட்டிய ஆரோக்கிய வாழ்வியல் முறை!


பெரியவர்களும், குழந்தைகளும், நம் முன்னோர்கள் சொல்லி சென்ற, ஒரு சில நல்ல விஷயங்களை, அவரவர் வாழ்க்கையில் தினமும் நடைமுறைப்படுத்தி வந்தாலே, நல்ல பலன் கிடைக்கும்.

கண் பார்வை பாதிப்புக்கு காரணம், உடலுக்குள் மேல்நோக்கி செல்லும் அக்னி அல்லது சூடுதான். மேலும் குளிக்கும் பொழுது செய்கிற தவறுதான் முதன்மையான காரணம்! ஒரு சில பேர் தவிர அனைவரும் முதலில் தலையில் நீர் ஊற்றுவார்கள். அது தவறு. சாதம் கொதிக்கவைக்கிற பானையில் மேலாக கஞ்சியும் அரிசியும் கொதிப்பது போல் தலையில் அக்னி கொதித்துக் கொண்டிருக்கும். நீர் தலையில் விழுந்ததும் அந்த அக்னி அங்கிருந்து விரட்டப்பட்டு கீழ் நோக்கி அழுத்தப்படும், அது நம் உடலில் கண்ணில் உள்ள மிக மென்மையான லென்ஸசை தாக்கும். எந்த பக்கம் லென்ஸ் வளைகிறதோ அதற்கு ஏற்ப பார்வை சரி செய்ய கண்ணாடி போடுகிறார்கள். அப்படியானால் சரியான முறை என்ன? 

குளிக்க தொடங்கும் முன், குளிர்ந்த நீரை ஒரு கை நிறைய எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முதலில் காலில் நீர் ஊற்றி மேல் நோக்கி நீர் ஊற்றி வரவேண்டும். உடலுக்குள் இருக்கும் சூட்டை நீரானது மேல் நோக்கி விரட்டி வரும். தொண்டை பக்கம் நீர் வந்தவுடன் வாயிலிருக்கும் நீர் ஓடி வந்த அக்னியை உள் வாங்கி கொள்ளும். பின்னர் தலையில், முகத்தில் நீர் ஊற்றும் பொழுது மேலிருந்து அக்னி கீழ் இறங்கும், அதையும் வாயிலிருக்கும் நீர் உள்வாங்கும். கண்ணை தாக்க அக்னியே இருக்காது. கண் உள்ளிருந்து குளிர்ந்து விடும்.

மேலும் குழந்தைகள் உறங்கும் முன் அவர்கள் தலை உச்சியில், தொப்பிளில் சிறிது விளக்கெண்ணெய் தடவினால் இரவு முழுவதும் அவர்கள் தலைக்கு வரும் சூட்டை அது தணித்து விடும்.

வாரத்தில் ஒரு நாள் குழந்தைகளை உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இது சாத்தியம் இல்லை என்று சொன்னாலும், மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

உண்ணும் உணவில் காரத்தை தவிர்ப்பது அல்லது நிறையவே குறைத்துக் கொள்வது நல்லது. குடல் சூடாவதை தவிர்க்கலாம். குடல் சூடுதான் மேல் நோக்கி வேகமாக போகும். அக்னி வேகமாக குளிரும்பொழுது நீராக மாறி உடலில் பல இடங்களில் கட்டும், பின்னர் சளியாகும் அதுவே கன்னத்தில் தங்கி "சைனஸ்" என்றாகும். எப்போதும் சூட்டை ஆணிவேரில் அறுத்தால், பல வியாதிகளை தவிர்க்கலாம்! 

இவை அனைத்தும் பரீட்ச்சித்து பார்க்கப்பட்டு இங்கு கூறப்பட்டுள்ளது, மேலும் பல சித்தர்கள் வாழும் முறையில் சொல்லிப்போன விஷயங்கள் இவை.

அகத்தியப்பெருமானுக்குத்தான் நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 22 மே, 2026

துளிகள் - 7 - கல்வி அறிவு, ஆன்மீக ஞானம், இயற்கை ஞானம் — மற்றவர்களுக்கு பகிர்வதற்காகவே நமக்கு தரப்படுகிறது!


இறைவன் மற்றும் குருவால் நமக்கு போதிக்கப்படும் கல்வி அறிவு, ஆன்மீக ஞானம் மற்றும் இயற்கை ஞானம் போன்றவை அனைத்தும் நம் வழியாக மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காகவே நமக்கு கொடுக்கப்படுகிறது.

இதனை உணராமல், “இது எனது, எனக்காக மட்டும், என் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக மட்டும் கொடுக்கப்பட்டது” என்று எண்ணி, அதனை மற்றவர்களுக்கு பகிராமல் பொருள் ஈட்டுவதற்காக மட்டும் பயன்படுத்தினால், அது ஒரு கடனாக மாறும்.

அந்த கடனை கழிப்பதற்காக மீண்டும் ஒரு பிறவி எடுத்து, நாம் பெற்ற அறிவையும் ஞானத்தையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து அந்த கடனை தீர்க்க வேண்டிய நிலை வரும்.

இக்காலத்தில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும், முற்பிறவியில் தாங்கள் பெற்ற அறிவையும் ஞானத்தையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்த காரணத்தால், அந்த கடனை கழிப்பதற்காகவே மீண்டும் அந்த ஞானத்துடன் அனுப்பப்பட்டுள்ளனர் என்று அகத்தியப்பெருமான் கூறுகிறார்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வியாழன், 14 மே, 2026

துளிகள் - 6 - நந்தியார் வட்டை பூவின் கண் பார்வை மூலிகை ரகசியம்


நந்தியார் வட்டை பூ, எங்கும் எளிதாக கிடைப்பது, பூக்களிலேயே மிக உன்னதமான மூலிகை சக்தி உடையது என சித்தர்கள் கூறுகிறார்கள். இது கண் பார்வை சம்பந்தமான எந்த குறையையும் (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள்ளெழுத்து, கண் புரை, குளுகோமா) போன்றவைகளை சரி செய்யும்.

சரி எப்படி உபயோகிப்பது?

நான்கு அல்லது ஐந்து பூக்களை பறித்து, 100 அல்லது 200 மில்லி சுத்தமான தண்ணீரில் போட்டு குறைந்தது மூன்று மணி நேரம் வைத்து இருந்து, பூக்களை அகற்றி அந்த நீரை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து, தொடர்ந்து தினமும் காலை ஒரு சொட்டு இரு விழிகளிலும், மாலை ஒரு சொட்டு இரு விழிகளிலும் விட்டு வந்தால், எந்த குறை இருந்தாலும் அது விலகிவிடும். கண்ணாடியை ஒதுக்கி வைத்துவிடலாம், கண் புரை காணாமல் போய்விடும், அறுவை சிகிர்ச்சையை தவிர்க்கலாம்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

புதன், 13 மே, 2026

துளிகள் - 5 - அகத்திய பெருமான் அருளிய மூலிகை பானம்


அகத்திய பெருமான் அருளிய எளிய மருந்து!

1. புதினா இலை - ஒரு பிடி அளவு.
2. கொத்தமல்லி இலை - ஒரு பிடி அளவு.
3. தோல் சீவிய இஞ்சி - ஒன்று.
4. மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்.
5. மிளகு பொடி - அரை ஸ்பூன்.
6. உப்பு - அரை ஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ப.
7. அரை மூடி எலுமிச்சை சாறு.

1 லிருந்து 6 வரை உள்ள பொருட்களை மிக்ஸியில் ஒரு டம்பளர் நீர்விட்டு நன்றாக அரைத்து, எடுத்து, பின் அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து, குடித்தால் எப்படிப்பட்ட ஜலதோஷம், இருமல், தொடர் வரட்டு இருமலும் காணாமல் போய்விடும்! ஒருமுறை குடித்தவுடனேயே பலன் தெரிந்துவிடும். 21 நாட்கள் தொடர்ந்து தினம் ஒருமுறை குடித்து வந்தால் அடுத்த மூன்று வருடங்களுக்கு இருமல் வராது!

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 10 மே, 2026

துளிகள் - 4 - மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று அமைதியின் நேரங்கள்


இன்றைய சித்தர் வாக்கு பதிவில், அகத்திய பெருமான் உரைத்த மனிதன் தினமும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய மூன்று நேரங்களை பற்றி பார்ப்போம்.

முதல் — மனிதன் நீராடும் பொழுது மௌனமாக இருந்து, தனக்கு தெரிந்த மந்திரங்களை மனதுள் ஜபம் செய்ய வேண்டும். இதன் தாத்பரியம் என்னவென்றால், உடலுக்குள் புகுந்த எதிர்வினை சக்திகளை நீர் கழுவி சுத்தம் செய்கிறது. அந்த நீருக்கு மரியாதை செய்யும் விதத்தில் அமைதியாக இருந்து மந்திர ஜபம் செய்வது உடலை மீண்டும் நலப்படுத்தும்.

இரண்டாவது — பூஜை, தவம் போன்றவற்றை செய்யும் போது அமைதியாக இருக்க வேண்டும். மனம் ஒருமுகப்பட வேண்டும். மந்திர ஜபம் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது.

மூன்றாவது — அன்னம் உண்ணும் பொழுது அமைதியாக இருக்க வேண்டும். அன்னத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். உடனிருப்பவர்களுடன் உரையாடுதல் போன்றவை கூடாது. உணவு தொடர்பான தேவைகளைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது.

இந்த மூன்று வழிகளும் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

சனி, 9 மே, 2026

துளிகள் - 3 - திருவோண நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டிய மோட்ச பிரார்த்தனை!

இன்றைய தினம் திருவோண நக்ஷத்திரம்.

அகத்திய பெருமான் அருளிய ஒரு உபதேசத்தை நினைவுகூர்வோம்.

ஐந்து அறிவு வரை பெற்ற அனைத்து ஜீவன்களும் மோட்ச நிலையை அடைவதற்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் திருவோண நக்ஷத்திரத்தன்று ஒரு எளிய ஆன்மிகப் பிரார்த்தனையை செய்யுமாறு அகத்திய பெருமான் உத்தரவிட்டுள்ளார்.

சிறிதளவு துளசி, மஞ்சள் பொடி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் இட்டு, கையில் வைத்து மனமாரப் பெருமாளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்:

“அகத்திய பெருமானின் உத்தரவின் பேரில் இந்த ஜெபத்தை செய்கிறேன். ஐந்து அறிவு வரை பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் மோட்சத்தை கொடுத்துவிடுங்கள்” என்று.

அதன் பின் 108 முறை:

“ஓம் ஶ்ரீ மாய மாலனே நமஹ”

என்ற மந்திரத்தை தியானத்துடன் ஜபித்து, அந்த நீரை பூமியில் அர்க்கியம் இட வேண்டும்.

இதை பித்ரு தர்ப்பணமாக எண்ணக் கூடாது. ஏனெனில் இதில் தர்பை போன்ற சடங்கு முறைகள் இடம் பெறுவதில்லை. இது ஐந்து அறிவு வரை பெற்ற ஜீவன்கள் மோட்சத்தை பெறுவதற்காக அகத்திய பெருமானால் அருளப்பட்ட பிரார்த்தனையாகும்.
 
வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

துளிகள் - 2 - விஷ்ணு ஸஹஸ்ரநாம உண்மை!

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் "ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே!" என்கிற இரண்டு வரிகளை பத்து முறை சொன்னால், விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும் என்பார்கள்! என்ன காரணம்?


சித்தர்கள் கூற்றின் படி, இந்த இரண்டு வரிகள் உடலை உள்ளிருந்து சுத்தம் பண்ண உதவுகிறது. எப்படி?


இந்த ஸ்லோகத்தை சொல்லும் பொழுது மூக்கின் அடியில் ஒரு விரலை குறுக்காக வைத்துப் பார்த்தால், மூச்சு காற்று மூக்கு வழி வெளியே வராது என புரியும்? அப்படியாயின் என்ன நடக்கிறது.


மந்திரம் கூறும் பொழுது வாய் வழியே உள்ளிருந்து அதிகப்படியான அளவில் வாயு வெளியே செல்கிறது. அதுவும் உடல் உபயோகித்து வெளியேற்றுகிற கார்பன் டை ஆக்சைடு. உடலும் ரத்தமும் சுத்தப்படுத்தப்படுகிறது. இதனால் அனைத்தும் தெளிவாகும்.


மந்திரம் வழி நம் முன்னோர்கள் ஒரு பயிற்சியை எப்படி தலைமுறைக்கு அளித்தார்கள் என்பதற்கு இது ஒரு நற்சான்று


வாக்குரைத்தவர் : அகத்தியப்பெருமான்!

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

துளிகள் - 1 - இறை தரிசனம்!

 
மனிதன் இறை தரிசனத்துக்கு ஆசைப்படுவது தவறு. அது இயல்பானது என்றாலும் இரு விஷயங்களை புரிந்து கொள்ளல் வேண்டும். தரிசனம் பெற்ற அந்த நொடியில் அந்த மனிதனுக்கு இரு நிகழ்வுகளில் ஒன்று நடை பெறலாம்.  ஒன்று, அந்த நொடியே பிராணனை இறை எடுத்து சென்றுவிடும். இரண்டு, இரு கண்களும் குருடாக போய்விடும்!, மீதம் இருக்கும் வாழ்க்கை முழுவதும் பார்வை இன்றி வாழ்ந்து முடிக்க வேண்டும்!

இறை தரிசனத்தில் ஒரு விதிவிலக்கும் உண்டு. இறையே விரும்பி, தன்னை குறுக்கிக் கொண்டு, மென்மையாக தரிசனம் கொடுத்தால், மேல் கூறிய இரு இழப்பின்றி அருளுடன் வாழலாம்! 

வாக்குரைத்தது -அகத்தியப்பெருமான்!