ஞாயிறு, 19 ஜூலை, 2026

துளிகள் - 33 - ஏன் இந்த பிறவியில் கஷ்டம்? - கர்ம வினையும் இறை நீதியும்!


எல்லாப் பிறவிகளிலும் ஆத்மா ஒன்றாக இருந்தாலும் ஏதோ ஒரு பிறவியில் உடல் செய்த பாவத்தின் பலன்களை இப்பிறவி உடல் ஏன் அனுபவிக்க வேண்டும் ? ஏனென்றால் இப்பிறவியில் வாய்த்த உடல் எந்த பாவங்களும் செய்யவில்லையே ?

நீ கேட்கின்ற கேள்வியை சுருக்கமாக நான் கேட்கிறேன். எந்த மன நிலையில், எந்த உணர்வில் ஒரு மனிதன் தவறு செய்கிறானோ அந்த உணர்வு இருக்கும்பொழுதே அவனுக்கு தண்டனையை கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லை. தான் யார் ? என்ன குற்றம் செய்தோம்? என்று தெரியாமலேயே ஒருவன் தண்டனை அனுபவிக்கிறானே, இது நியாயமா ? என்று கேட்கிறாய். இதுதானப்பா உச்சகட்ட தண்டனையே. ஒருவன் ஆரோக்கியமாக, சொத்து சுகத்தோடு இருக்கிறான். நல்ல பதவியில் இருக்கிறான். அப்படி அவன் இருப்பதற்கு காரணம் இறைவன் அவனுக்கு தந்திருக்கிறார். அப்பொழுது அவன் என்ன செய்ய வேண்டும் ? மேலும், மேலும் நற்பணிகளை செய்ய வேண்டும். யாராவது செய்கிறார்களா ? எத்தனை மகாராஜாக்கள் எத்தனை அட்டூழியங்களை செய்தார்கள் ? எத்தனை ஜமீன்தார்கள் எத்தனை தீய காரியங்களை செய்தார்கள் ? இப்படியெல்லாம் செய்துவிட்டு, அந்தப் பிறவியின் புண்ணியத்தை, ஓட்டை பாத்திரத்தில் நீரை வழிய விடுவதுபோல விட்டுவிடுகிறான். புண்ணியத்தால் பெற்ற செல்வத்தையும், பதவியையும் மேலும் நன்மைக்கு பயன்படுத்தாமல், ஒரு சிலர் தவிர, மற்ற அனைவருமே தவறுகளுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள். என்னென்ன அட்டூழியங்கள் எல்லாம் இந்த மனிதன் செய்கிறான் தெரியுமா ? சற்று பணமும், பதவியும் வந்துவிட்டால், சொல்வதை கேட்பதற்கு சில எடுபிடிகள் கிடைத்துவிட்டால் போதும், இவன் செய்வதெல்லாம் அட்டூழியம்தான், அயோக்கியத்தனம்தான் , பாவங்கள்தான். சொத்துக்காக பிறரை துடிக்க, துடிக்க வதைத்து கொல்வான். காண்கின்ற பெண்களையெல்லாம் மஞ்சத்திற்கு அழைப்பான். இப்படியெல்லாம் செய்து புண்ணியம் தீருகின்ற சமயத்திலே அவனுக்கு அகவை முதிர்ந்துவிடும். பால்ய காலத்தில் செய்த பாவங்கள் அவன் உடலையும், உள்ளத்தையும் தாக்கும். அப்பொழுதுதான் அவனுக்கு ஞானம் வரும். துன்பம் வரும்பொழுதுதானே ஞானம் பிறக்கிறது. ‘ இறைவா ! தெரியாமல் செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடு, எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடு “ என்று கெஞ்சுவான், கதறுவான். அதன் பிறகு அவன் திருந்தினாலும் வாழ்வதற்கு அவன் ஆன்மா இருக்கும், உடல் இருக்காது . என்ன செய்வது ? மீண்டும் ஒரு பிறவி எடுக்கிறான். புதிய உடல் தரப்படுகிறது. பழைய நிகழ்வுகள் எல்லாம் மறைபொருளாக மறைக்கப்படுகிறது. அவன் என்ன வேண்டினான் ? செய்த பாவங்கள் எல்லாம் தீரவேண்டும் என்று. பாவங்களை தீர்ப்பதற்காகத்தான் அவனுக்கு கஷ்டங்கள் கொடுக்கப்பட்டு, கொடுக்கப்பட்டு, எந்தெந்த வழிகளில் பாவங்கள் செய்தானோ அந்தந்த வழிகளில் அவைகளையெல்லாம் நீக்கி அவனை சுத்தி படுத்தும் வேலை துவங்குகிறது. இந்த சுத்தி படுத்தும் வேலை ஒரு பிறவியில் துவங்கி ஓராயிரம் பிறவிகள் வரை தொடரும். ஒரு பிறவியிலேயே நிறைவாகும். அது, அந்தந்த ஆன்மாக்களின் மனோதிடத்தை பொறுத்தது, மனோ பலத்தை பொறுத்தது.
இறை இந்த நீதியை காரண, காரியமில்லாமல் வைக்கவில்லை. அது மட்டுமல்ல, நீ எண்ணுவதுபோல் அந்தந்த பிறவியில் செய்த தவறுகளுக்கு அந்தந்த பிறவியிலேயே தண்டனை இல்லை என்று மட்டும் சொல்லாதே. அந்தந்த பிறவியிலும் தண்டனை உண்டு. ஆனால் யாருக்கு தண்டனை வரும் தெரியுமா ? சிறிதளவு பாவங்கள், அதிகளவு புண்ணியம் வைத்திருக்கும் ஆத்மாக்கள் சற்று தவறு செய்தாலும் போதும், உடனேயே இறை குறுக்கிட்டு “ ஆஹா ! என் பையன், என் சேயவன் தவறான வழியில் செல்கிறானே “ என்று உடனடியாக தண்டித்து, கட்டி, இழுத்து விடுவார். ஆனால் பெருமளவு பாவச்சேற்றிலே அமிழ்ந்திருக்கும் மனிதனை ‘ இவனை விட்டுத்தான் பிடிக்க வேண்டும் . இவன் என்னை உணர்வதற்கு இன்னும் பல பிறவிகள் இருக்கிறது ‘ என்பதால் இவனை இவன் போக்கிலேயே விட்டு, அவன் உணரும் பிறவி வரும்பொழுது இறை எம்போன்ற மகான்களை அனுப்பி அவனுக்கு நல்லவைகளை எடுத்துரைத்து அவனை தன் பக்கம் இழுத்துக் கொள்ளும்.
எனவே எந்த பிறவியில், எந்த உணர்வில் ஒரு மனிதன் தவறு செய்தாலும் அந்த உணர்விற்கு அவன் வந்துவிடுவான் அந்த தண்டனை கிடைக்கும்பொழுது. அது அவனவன் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.

அப்பனே ! ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் பேறு, அது நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, இன்பம், துன்பம் எல்லாவற்றையும் இறை தீர்மானிப்பதில்லை. அந்தந்த உயிர்தான் தீர்மானித்துக் கொள்கிறது. அந்த உயிர் அறியாமையால் சில விருப்பங்களை மனதில் வளர்த்துக் கொள்கிறது. அந்த விருப்பங்கள் நிறைவேறும் வரை அதற்கு அமைதி கிடைப்பதில்லை. எனவேதான் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு வருமாறு இறைவன் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார். ஏனென்றால் அணிந்திதை, கமலினி கதை தெரியுமா உனக்கு ? கயிலையிலே சுந்தரர் இருந்தபொழுது, ஒரு கணம் கூட இல்லை, அம்பிகையின் தோழிமார்கள் அழகாக இருக்கிறார்களே ? என்றுதான் நினைத்தார். அப்படி நினைத்த உடனே “ பூமிக்கு செல், அதை முடித்துவிட்டு வா. அதற்கான இடம் இதுவல்ல.இது காமனை எரித்த இடம் . இங்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் அதற்குரிய இடம் பூமி “ என்று அனுப்பி விடுகிறார் இறைவன்.
அப்படித்தான், கர்ணனின் மனோ நிலை வேறு, மஹாபலியின் மன நிலை என்பது வேறு. எந்தவொரு அசுரனும் நன்மை மட்டுமல்ல, தீமையும் கலந்துதான் செய்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மஹாபலி பெற்ற பேறு, வேறு யார் பெற முடியும் ? கர்ணன் காட்சியைதானே கண்டான். மஹாபலி திருவடி தீக்ஷையை அல்லவா பெற்றிருக்கிறான்? மஹாபலியின் பிள்ளை செய்யாத அட்டூழியம் இல்லை. இருந்தாலும்கூட அவனும் திருவடியால் தீண்டப்பட்டு வானத்திலே நிரந்தரமாக இருக்கும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறான். எனவே அவரவர்கள் விருப்பத்தை, ஆசையை அந்தந்த காலகட்டங்கள் வரும்பொழுது இறை நிறைவேற்றி விடுகிறது.
 
 திருக்கடையூரில் எமனை எட்டி உதைத்ததாகத்தானே வரலாறு ? எமன் அதற்காக எத்தனை காலங்கள் *தவம்* செய்தார் என்று யாருக்காவது தெரியுமா? முக்கண்ணனின் திருவடியால் தீண்டப்பட வேண்டும், உதை வாங்க வேண்டும், அந்த பெரும்பேறு எனக்கு வேண்டும் இறைவா ! என்று பல்லூழி ஆண்டு காலம் செய்த தவத்தின் பயன்தான் திருவடி தீக்ஷையானது அவருக்கு அங்கே மார்கண்டேயர் மூலம் கிடைத்தது. எனவே இறையின் செயல்களை வெளிப்படையாக பார்த்தால் ஒன்று நன்மை போல் தோன்றும். ஒன்று தீமை போல் தோன்றும். ஆனால் அதன் முடிவு அந்தந்த ஆத்மாவிற்கு நன்மையாகத்தான் முடியும். எனவே இரண்டுமே அந்தந்த ஆத்மாக்களின் ஆசைதான், தாகம்தான். அதை அந்தந்த கால கட்டத்திலே எப்படி நிறைவேற்ற வேண்டுமோ, இறை அப்படி நிறைவேற்றி விடுகிறார்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக